இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இங்கிலாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணிக்கு தற்போது சவால் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து ராணி 200 ரன்களுக்குள் சுருண்டு விடுவது போல இருந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் பென்ஸ் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் எடுக்க இறுதியில் 246 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 80, கேஎல்.ராகுல் 86, ஜடேஜா 87 என ரன்கள் எடுக்க, 436 ரன்கள் இந்திய அணி குவித்தது. இங்கிலாந்து அணியை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி 31, பென் டக்கெட் 47 ரன்கள் என அதிரடியான துவக்கத்தை கொடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதற்கடுத்து ஜோ ரூட் 2, ஜானி பேர்ஸ்டோ 10, பென் ஸ்டோக்ஸ் 6 என ஏமாற்றம் தந்தார்கள். இந்த நிலையில் போப் உடன் விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் இணைந்து சிறப்பாக விளையாட ஆரம்பித்தார்கள்.
இந்த ஜோடியில் போப் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது. 154 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் உடன் தனது ஏழாவது டெஸ்ட் சதத்தையும் இந்தியாவில் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் அடித்து அமர்க்களப்படுத்தினார்.
இறுதியாக இந்த ஜோடி 112 ரன்கள் குவித்து பிரிந்தது. ஃபோக்ஸ் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தியாவுக்கு தொந்தரவு தந்த இந்த ஜோடியை அக்சர் படேல் கிளீன் போல்ட் செய்து பிரித்தார்.
இதற்கு அடுத்து போப் மற்றும் ரேகான் அஹமத் மேற்கொண்டு விக்கெட் விழாமல் மூன்றாவது நாளை இங்கிலாந்துக்கு முடித்திருக்கிறார்கள். தற்பொழுது இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருக்கிறது. போப் 199 பந்துகளில் 17 பவுண்டரிகள் உடன் 148 ரன்கள், ரேகான் அஹமத் 6 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். தற்பொழுது இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க : 21 டெஸ்ட்கள்.. இந்திய அணி சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இங்கிலாந்து .. காப்பாற்றிய போப்
இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் தலா இரண்டு விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கட்டும் கைப்பற்றி இருக்கிறார்கள். தற்பொழுது போட்டி நான்காவது நாளுக்கு சென்றதோடு, இங்கிலாந்து நாளை சிறப்பாக விளையாடினால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கும் பிரச்சனை வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.