“தோனி கிடையாது.. 2007 WC கடைசி ஓவர் ஜோகிந்தர் சர்மாவை வீச வச்சது அவர்தான்” – யுவராஜ் சிங் அதிரடி பேட்டி

0
33476

2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுடன் தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது டி20 உலக கோப்பைக்கு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் அணி அனுப்பப்பட்டது.

அவர்கள் தென்னாப்பிரிக்கா சென்று முதலாவது டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாகவும் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக உருவெடுத்தது. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததோடு 12 பந்துகளில் அரை சதம் எடுத்து உலக சாதனையும் புரிந்தார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக அரை சதம் எடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் கேன்சர் நோயுடன் விளையாடிய அவர் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற பேட்டிங் மற்றும் பவுலிங் என ஆல் ரவுண்டராக சிறந்து விளங்கி உலகக்கோப்பையின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது நடைபெற்று வரும் 13 வது உலகக் கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசிய யுவராஜ் சிங் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த ரகசியம் ஒன்றை தற்போது தெரிவித்திருக்கிறார் . 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற ஒரு ஓவர்களுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் அரை சதம் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார்.

அந்தப் போட்டியின் இறுதி ஓவரை வீச மகேந்திர சிங் தோனி இளம் வீரர் ஜோகிந்தர் சர்மாவை தேர்வு செய்தார். அந்த ஓவரின் முதல் பந்து வைட் பாலாக வீசப்பட்ட நிலையில் இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்தை மிஸ்பா சிக்ஸ் இருக்கு விலாசினார். நான்கு பந்துகளுக்கு ஆறு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்கூப் ஷார்ட் அடிக்க முயன்ற போது ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் மிஸ்பா. இதனால் இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

தோனி இறுதி ஓவரை வீச இளம் வீரரை பயன்படுத்தியது கிரிக்கெட் வீரர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவரிடமும் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இந்தப் போட்டி முடிந்து 16 வருடங்கள் கழித்து யுவராஜ் சிங் ஜோகிந்தர் சர்மாவை பந்து வீச அழைத்தது தோனியின் முடிவு அல்ல என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் யுவராஜ் ” இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது இந்திய அணியின் வசம் இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜோகிந்தர் சர்மா மற்றொருவர் ஹர்பஜன் சிங்.ஜோகிந்தர் சர்மா அணிக்கு புதிய வீரர் என்பதால் அனுபவ வீரரான ஹர்பஜனிடம் இறுதி ஓவரை வீசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் ஹர்பஜன் சிங் தான் இதற்கு முன்பு வீசிய ஓவரில் மிஸ்பா 3 சிக்ஸர்கள் அடித்ததால் இந்த ஓவரை ஜோகிந்தர் சர்மா வீசினால் சரியாக இருக்கும் என்று கூறினார். மேலும் சுழல் பந்துவீச்சை சிறப்பாக ஆடுவதால் வேகப்பந்து வீச்சாளர் வந்து வீசலாம் எனக் கூறி ஹர்பஜன் சிங் தான் தோனிக்கு இந்த ஆலோசனை வழங்கினார் என தெரிவித்திருக்கிறார். 16 வருடங்கள் கழித்து இந்த ரகசியம் தற்போது தெரிய வந்திருக்கிறது.