“நீங்க என்ன வேணா செய்யலாம்.. ஆனால் சதம் சதம்தான்.. அதை ஜெயிக்க முடியாது!” – வெற்றிக்குப் பின் ரோகித் சர்மா பேச்சு!

0
30961
Rohit

இன்று இந்திய அணி பங்களாதேஷ அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய அணிக்கு நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பங்களாதேஷ் அணியை கட்டுப்படுத்தினார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 48 சுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி வெற்றியை உறுதி செய்து 103 ரன்கள் எடுத்தார்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்பொழுது ” இது நல்ல வெற்றி. இது நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. நாங்கள் சரியாக தொடங்கவில்லை ஆனால் நடுவிலும் இறுதியிலும் சரியாகப் போட்டியை இழுத்துப் பிடித்தோம். நாங்கள் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் எங்களுடைய ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது. இன்றும் நாங்கள் அதைத் தொடர்ந்தோம்.

- Advertisement -

இந்த விஷயம் நமது கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாகும். எனவே முடிந்த வரையில் முயற்சி செய்து நாம் இந்த விஷயத்தில் சிறப்பாக இருந்தாக வேண்டியது அவசியம். எங்கள் பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்திற்கு என்ன லைன் மற்றும் லென்த் வேண்டும் என்று புரிந்து கொள்ளக்கூடிய நல்ல புத்திசாலிகள்.

இன்றைக்கு ஜடேஜா பந்துவீச்சில் மிகச் சிறப்பாக இருந்தார். அதேபோல அபாரமான ஒரு கேட்ச் எடுத்தார். ஆனால் எப்பொழுதுமே சதம் என்பது சதம். அதை நம்மால் ஜெயிக்க முடியாது. அதனால் இன்றைய போட்டியில் அவர் ஆட்டநாயகன் விருதில் இல்லை.

போட்டியின் நாளில் நன்றாக ஃபீல்டிங் செய்யக்கூடிய அவர்களுக்கு நாங்கள் பதக்கங்கள் தருகிறோம். இது அவர்களை உயர்த்தக்கூடிய ஒன்றாக அமையும். அதிக பதக்கங்களை அவர்கள் வென்று முடிக்கும் பொழுது அதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது.

நியூசிலாந்து என்று கிடையாது எல்லா போட்டியுமே பெரிய போட்டிதான். எங்கள் மொத்த குழுவும் இது அழுத்தமான சூழ்நிலைகளில் கடந்து தான் வந்திருக்கிறோம். அதேபோல் கூட்டம் எங்களை ஏமாற்றவில்லை. மேலும் கூட்டத்தில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும்!” என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!