இந்தியாவில் இந்த மாதம் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடர் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து உடனே ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ரோஹித் சர்மா சில பாராட்ட தகுந்த வேலைகளை செய்து வருகிறார்.
நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியில் சில இளம் மற்றும் மூத்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே மக்களுக்கு இது குறித்தான தெளிவை கொடுப்பதற்கு, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தது சிறப்பான விஷயமாக அமைந்திருக்கிறது.
பொதுவாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்புக்கு வந்ததிலிருந்து, உலகக் கோப்பை தொடருக்கு வாய்ப்புகள் கிடைக்காத வீரர்களிடம் பேசி, என்ன காரணத்திற்காக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதை விளக்கி, அவர்களுடன் நட்போடு தொடர்வதையும், நம்பிக்கை தருவதையும் ஒரு வழக்கமாக மாற்றி இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தனக்கு இடம் கிடைக்காத பொழுது யாரும் பேசாததால், ரோகித் சர்மா மற்ற இளம் வீரர்களுக்கு இதை செய்யக்கூடாது என நினைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னால் வீரர் டாம் மூடி கூறும் பொழுது “இதுதான் சிறந்த தலைமை. நீங்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவரை அணியில் சேர்க்கும் பொழுது அவருடன் பேசுவது எளிதான விஷயம். ஆனால் தேர்வு செய்யாத வீரர்ஒருவரிடம் பேசுவது கடினமான ஒன்று. அதனால்தான் ரோகித் சர்மா தன் அணியினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். அவர் ஒரு நல்ல தலைவர். அவரிடம் தேர்வு செய்யாத ரிங்கு சிங்கிடம் பேசியது போன்ற மென்மையான குணம் இருக்கிறது. இதுதகவல் தொடர்புக்கு முக்கியமானது.
ரிங்கு சிங் மீதம் இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பது இங்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் அவர் அணியில் இல்லாததற்கான காரணம், அணியின் காம்பினேஷன் தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. அஜித் அகர்கர் அதை தெளிவுபடுத்திய விதத்தில் மிகச் சிறப்பாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க : நான் உண்மையான ஆல் ரவுண்டர்.. பெரிய வாய்ப்புக்கு காத்திருக்கேன்.. என் ரோல் இதுதான் – நிதிஷ் ரெட்டி பேட்டி
அக்சர் படேல் கூடுதல் ஆல் ரவுண்டராக சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் அணியில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடுவதை அவரது தேர்வு உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே ரிங்கு சிங் நீக்கப்பட்டிருக்கிறார். மற்றபடி ரிங்கு சிங் நீக்கத்திற்கு பின்னால் வேறு எந்த காரணங்களும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.