“நேற்று எனக்கு ஈசியா இல்ல.. இப்படித்தான் மாறிக்கிட்டேன்” – தமிழக வீரராய் தனி சாதனை படைத்த சாய் சுதர்சன்!

0
811
Sai

நேற்று தமிழகத்திலிருந்து இந்திய அணியில் இடம் பிடித்து, இடம் பிடித்த வேகத்தில் விளையாடும் வாய்ப்பை முதல் போட்டியிலேயே பெற்று, அறிமுக போட்டியிலேயே அசத்தலாக ஆட்டம் இழக்காமல் அரைசதம் அடித்திருக்கிறார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சன் 2021 ஆம் ஆண்டுதான் டிஎன்பிஎல் டி20 லீக்கில் முதன் முதலில் உள்ளே வந்தார். அதற்கு அடுத்த ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலத்தில் அடிப்படை விலையான இருபது லட்சம் ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அங்கிருந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை பயணம் அப்படியே மாறியது. தமிழக அணிக்கு சென்றார், இந்திய ஏ அணிக்கு வந்தார், அடுத்து உடனே தற்பொழுது இந்திய தேசிய அணிக்கும் வந்து விட்டார்.

இந்தக் குறுகிய காலத்தில் இவருடைய வளர்ச்சி எந்த அளவிற்கு வேகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு தன்னை தகுதிப்படுத்திக் கொள்வதற்கான இவரது உழைப்பும் புத்திசாலித்தனமும் சிறப்பாக இருக்கிறது. இவரிடம் ஒருமுறை பேட்டிங்கில் காணும் தவறை இன்னொரு முறை பார்க்க முடியாது என்பதுதான் இவருடைய தனிச்சிறப்பு என்று கூறுகிறார்கள். அந்த அளவிற்கு மிக வேகமாக தவறுகளை திருத்திக் கொள்ளும் வீரராக இருக்கிறார்.

நேற்றைய போட்டியிலும் ஆரம்பத்தில்இவர் வெளியேற ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த தவறை திருத்திக் கொண்டு மிக வேகமாக மாறி, சரியான முறையில் விளையாடி அரைசதம் அடித்து, தமிழகத்திலிருந்து சென்ற வீரர்களில் அறிமுக போட்டியில் அரைசதம் இந்தியாவுக்காக அடித்த முதல் வீரர் என்கின்ற அற்புத சாதனையை படைத்தார்.

- Advertisement -

போட்டி முடிவுக்குப் பின் பேசியுள்ள சாய் சுதர்சன் கூறும்பொழுது “முதலில் நாட்டிற்கு விளையாடுவதும் பின்பு அணியின் வெற்றிக்கு பங்களிப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. விளையாடத் துவங்கும் ஒவ்வொரு குழந்தையும், தங்கள் நாட்டிற்கு சிறந்ததை செய்யவே விரும்புகிறார்கள். நான் அதுபோல ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன்.

இந்திய தேசிய அணிக்கான தொப்பியை வாங்கிக் கொள்ளும் நிகழ்வு அற்புதமான உணர்வு. நான் இந்த தொப்பியை கொடுக்கும் கலாச்சாரத்தை விரும்புகிறேன். நான் முதலில் தமிழ்நாட்டு அணிக்காக தொப்பியை வாங்கினேன். பிறகு நான் எங்கு விளையாடுவதற்கும் தொப்பிகள் கிடைக்கும் பொழுது அது சிறப்பான ஒன்று. நான் இதற்கென்று வீட்டில் தனி ஹேங்கர் வைத்திருக்கிறேன். மேலும் இந்திய அணிக்காக தொப்பியை கேஎல்.ராகுல் அண்ணனிடமிருந்து வாங்கியது சிறப்பு.

இந்த ஆடுகளத்தில் செட்டில் ஆவது கொஞ்சம் கடினமாக இருந்தது. இது ஒரு கடினமான ஆடுகளமாக இருந்ததால் இது எளிதான வேலையாக இல்லை. ஆனால் நானும் ஸ்ரேயாஸ் ஐயர் பாயும் நல்ல முறையில் தொடர்பு கொண்டோம். இதுதான் நிலைமைகளை சரி செய்ய எங்களுக்கு உதவியது!” என்று கூறி இருக்கிறார்!