13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரில் 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இந்தப் போட்டியில் தொடரானது வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. மொத்தமாக 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையில் முதல் போட்டி மற்றும் இறுதிப் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி மற்றும் கடந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த உலக கோப்பையில் விளையாட இருக்கும் எட்டு அணிகளும் வேர்ல்டு சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்காக கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே நாட்டில் வைத்து உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
மேலும் கடந்த 12 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் விளையாடிய இரண்டு முறை உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 13-வது உலகக் கோப்பை போட்டிகளுக்கான தகுதியை இழந்துள்ளது. இதன் மூலம் முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையில் வழங்கப்படும் பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் இந்திய மதிப்பு 84 கோடி ஆகும்.
நடைபெற இருக்கும் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு பரிசு தொகையாக 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. இதன் மதிப்பு ஏறக்குறைய 33 கோடி ஆகும். மேலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு பரிசுத்தொகையாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு 16 கோடியே 50 லட்சம் ஆகும். மேலும் ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கும் 40,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருக்கிறது.
உலகக் கோப்பை போட்டிகளில் அரை இறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. மேலும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியடையும் அணிகளுக்கு பரிசு தொகையாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 6.65 கோடி ரூபாய் ஆகும். மேலும் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மகளிர் உலகக்கோப்பை போட்டிகளுக்கும் இதே பரிசு தொகையை வழங்கப்படும் எனவும் ஐசிசி அறிவித்திருக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாலின பாகுபாடு இன்றி சம அளவில் ஊதியம் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்படும் என 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற ஐசிசி யின் ஆண்டு விழா கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இருக்கும் நாடுகளின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 28 ஆகும்.
உலக கோப்பையில் நடைபெற இருக்கும் 48 ஆட்டங்கள் தவிர 10 பயிற்சி போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இந்த பயிற்சி போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் உலக கோப்பையில் கலந்து கொள்ள இருக்கும் 10 நாடுகளும் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளன. இந்த பயிற்சி ஆட்டங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் ஹைதராபாத் மற்றும் கௌஹாத்தி ஆகிய நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்திய அணி தனது உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது.