13 வது 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 போட்டிகளைக் கொண்ட இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன.
உலகக் கோப்பையில் பங்கு பெற்று விளையாடும் 10 அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கிய உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இந்தப் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இலங்கை அணியை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பையின் ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஐந்து அணிகள் உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கி இருக்கின்றன. இந்த அணிகள் புள்ளிகள் பட்டியலில் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்று பார்ப்போம்.
2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடம் பெற்று இருக்கிறது. நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் தலா இரண்டு புள்ளிகள் பெற்று இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முதலிடத்தை பெற்றிருக்கிறது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 282 ரன்களை 36.2 ஓவர்களில் எட்டியது. மேலும் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி முதலிடத்தில் இருக்கிறது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 428 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இலங்கை அணியை 326 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ததன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்று இருக்கிறது. பங்களாதேஷ் அணி 156 ரன்களை 34 ஓவர்களில் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 199 ரன்களை41.2 ஓவர்களில் சேஸ் செய்து இந்த உலகக் கோப்பையில் தனது வெற்றி கணக்கை தொடங்கி இருப்பதோடு புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்தை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை 9-வது இடத்திலும் பாகிஸ்தான் அணியுடன் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நெதர்லாந்து 8-வது இடத்திலும் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி 7-வது இடத்திலும் ஆஸ்திரேலியா அணி 6-வது இடத்திலும் இருக்கிறது.