WIvsAUS முதல் டெஸ்ட் முடிவு.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளி பட்டியல்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்

0
196
WTC

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு வருடங்களில், அதிக டெஸ்ட் வெற்றி சதவீதத்தை பெற்றிருக்கும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்ளும். வெல்லும் அணி அடுத்த இரண்டு ஆண்டு காலம் உலக டெஸ்ட் சாம்பியன் ஆக விளங்கும்.

இதுவரை நடந்து முடிந்திருக்கும் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிகளிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் சாம்பியன்ஷிப்பை இழந்து வந்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் இருந்து வருகிறது. பேட் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஆஸ்திரேலியா புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

தன்னுடைய வழக்கமான ஆக்ரோஷமான கள அணுகு முறையை கைவிட்டு, திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி வெல்வதை தற்போதைய அணுகுமுறையாக ஆஸ்திரேலியா மாற்றி இருக்கிறது. இதன் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் உலக சாம்பியனாக ஆஸ்திரேலியா இருக்கிறது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அணிகளை தேர்வு செய்ய, ஒரு அணி எத்தனை போட்டிகள் விளையாடி எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை வைத்து, வெற்றி சதவீதம் கொடுக்கப்படுகிறது. அதாவது இரண்டு போட்டியில் ஒன்றில் தோல்வி ஒன்றில் வெற்றி என்றால், வெற்றி சதவீதம் 50 ஆக நிர்ணயிக்கப்படும். இந்த வெற்றி சதவீதமே இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லும்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. இதற்குப் பிறகு தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புதிய புள்ளி பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா அணி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி வருகிறது.

ஆனால் மூன்றாவது நான்காவது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய அணியின் வெற்றி சதவீதத்திற்கு மிக அருகில் இருக்கின்றன. எனவே இந்திய அணி வருகின்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பெரிய அளவில் வெல்வது நல்லது.

மேலும் அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இரண்டு அணிகளும் விளையாடுவதால், ஏதாவது ஒரு அணி இரண்டு டெஸ்டையும் வெல்லும் பொழுது, அது இந்திய அணிக்கு பெரிய சவாலாக மாறும்

புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் :

ஆஸ்திரேலியா – 61.11
இந்தியா – 54.16
தென்னாப்பிரிக்கா – 50.00
நியூசிலாந்து – 50.00
வங்காளதேசம் – 50.00
பாகிஸ்தான் – 36.66
இங்கிலாந்து – 15.00
மேற்கிந்திய தீவுகள் – 11.11
இலங்கை – 00.00