ஆஸ்திரேலிய அணியுடன் உள்நாட்டில் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி இருக்கிறது. இந்தத் தொடரை எடுத்துப் பார்க்கும் பொழுது, இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு குறிப்பாக இறுதிக்கட்ட பந்துவீச்சு கவலை அளிப்பதாக இருக்கிறது.
இந்திய அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்சல் படேல் இருவரும் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த ஆண்டு முழுவதும் இந்திய டி20 அணியின் வேகப்பந்து வீச்சு தலைவராக புவனேஸ்வர் குமார் இருந்து வருகிறார். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாகலை அணி நிர்வாகம் நம்பியிருக்கிறது.
ஆனால் இவர்கள் எல்லோரது பந்துவீச்சு செயல்படும் ஒரு சீரான அளவில் இருப்பதில்லை. மிக முக்கியமாக இறுதிக்கட்ட நேரத்தில் புவனேஸ்வர் குமார் அதிக ரன்களை விட்டுத் தருகிறார். மிடில் ஓவர்களில் சாகல் அதிக ரன்களுக்கு போகிறார், இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் குவித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக அமைவதில்லை. வெற்றி பெற்றாலும் போராடியே வெற்றிபெற வேண்டியதாய் இருக்கிறது.
இதையடுத்து காயத்தில் இருந்து திரும்பி இருக்கும் ஹர்ஷல் படேல் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருக்கிறது. டி20 உலகக்கோப்பை மிக அருகில் இருக்கும் பொழுது இது எல்லாம் மிக கவலைக்குரிய விஷயமாக இந்திய அணி நிர்வாகத்திற்கு மாறி இருக்கிறது. தற்போது ஹர்சல் படேல் மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரையும் வைத்து கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த கேப்டன் ரோகித் சர்மா ” ஹர்சல் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். காயத்திற்கு பிறகு ஒரு வீரர் திரும்பி வருவது என்பது அத்தனை எளிதானது கிடையாது. அவர் இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிட்டு இருக்கிறார். ஒரு கிரிக்கெட் வீரர் காயத்தால் கிரிக்கெட்டை தவற விடும் பொழுது அவர் திரும்பி வர வேண்டியது அவசியமானது. அது எளிதல்ல. இந்த மூன்று ஆட்டங்களில் இவர் எப்படி செயல்பட்டார் என்று நாங்கள் மதிப்பிடப் போவதில்லை. ஏனென்றால் அவரின் தரம் எங்களுக்கு தெரியும்” என்றார்.
மேலும் இவரை பற்றி பேசிய கேப்டன் ரோகித் சர்மா ” ஹர்சல் கடந்த காலங்களில் மிகவும் கடினமான ஓவர்களை வீசி இருக்கிறார். இதேபோல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காகவும் வீசியிருக்கிறார். அந்த நம்பிக்கையை தொடர்ந்து காட்டுவது முக்கியம். அவர் தனது தவறுகளை சரி செய்யவும் முயற்சிக்கிறார். அவர் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைக்கிறார். அவர் சிறப்பாக மீண்டு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை ” என்று தெளிவுபடுத்தினார்.
புவனேஸ்வர் குமார் பற்றி பேசியுள்ள கேப்டன் ரோகித் சர்மா அதில் ” புவிக்கு அவரது இடத்தை நாம் கொடுப்பது மிகவும் முக்கியம். கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மோசமான நாட்களை விட நல்ல நாட்களே நிறைய அமைந்து இருக்கிறது. ஆனால் சமீபத்தில் சில நாட்கள் அப்படி இல்லை. இப்படி திடீரென்று மோசமாக சிலநாட்கள் அமைவது எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். மேலும் இறுதி கட்ட ஓவர்களை வீசுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நாங்கள் சில திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். மேலும் அவருக்கு நாங்கள் இறுதிகட்ட அவர்களைத் தொடர்ந்து வழங்குவோம். பின்பு அவர் முன்பு போல் சிறப்பாக இருப்பார்” என்று கூறினார்.
மேலும் இவரை பற்றி தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா ” நான் புவி உடன் தனிப்பட்ட முறையில் பேசினேன். அவரின் நம்பிக்கையில் எந்தக் குறையும் இல்லை. அவர் தன்னம்பிக்கையோடு இருப்பதை நான் தெளிவாகப் பார்க்கிறேன். ஒரு குழுவாக நாங்கள் அவரின் செயல் திறனை நம்புகிறோம். கடந்த காலத்தில் அவர் எங்களுக்காக மிகச்சிறப்பாக வேலைகளைச் செய்து உள்ளார். சில மோசமான நாட்களை வைத்து அவரது திறமையையும் தரத்தையும் மதிப்பிட முடியாது அது தவறு” என்று ரோகித் சர்மா கூறினார்.