இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது t20 போட்டி பிரிஸ்டல் நகரில் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்று தொடரை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்த சூழலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவன் லீவிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாய் ஹோப் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஒரே ஓவரில் 5 சிக்சர்:
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்தது. கேப்டன் சாய் ஹோப் 38 பந்துகளில் 49 ரன்கள் எடுக்க, ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சரிவை நோக்கி சென்றது. அப்போது களத்திற்கு வந்த ரோமன் போவெல் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.
இதில் இரண்டு சிக்சர்,மூன்று பவுண்டரி அடங்கும். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்கள் தான் எடுக்கும் என்ற நிலை இருந்தபோது ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர் ஆதில் ரசித் வீசினார். இந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர்கள் ஜேசன் ஹோல்டர் மற்றும் ரொமெரியோ செபர்ட் ஆகியோர் அபாரமாக விளையாடி நான்காவது பந்து சிங்கிள்ஸ் எடுத்தார்.
இங்கிலாந்து திரில் வெற்றி:
இதை அடுத்து கடைசி இரண்டு பந்தில் ரெமோரியா செபர்ட் இரண்டு சிக்ஸர்களை விளாச 19வது ஓவரில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் அடித்தது.இதன் மூலம் 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
இதையும் படிங்க: என் மனதில் தோன்றிய அந்த தப்பான சிந்தனைதான்.. நான் ஓய்வு பெற காரணம் – ஹென்றிச் க்ளாசன் ஓபன் டாக்
தொடக்க வீரர் ஜாமி ஸ்மித் 4 ரன்களில் ஆட்டம் இழக்க பென் டக்கட் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் என 18 பந்து 30 ரன்கள் எடுத்தார். இதேபோன்று ஜாஸ் பட்லர் 36 பந்துகளில் 47 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 20 பந்தில் 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஜாக்கப் போத்தல் 10 பந்துகளில் 26 ரன்களும் டாம் பேட்டன் 11 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. 9 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றிருக்கிறது.






