தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி மிடில்வரிசை பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவு பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் ஓய்வு பெற்றதற்கான காரணம் குறித்து அவர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தென்னாபிரிக்க அதிரடி வீரர் ஒய்வு
தென்னாபிரிக்க அணியின் அதிரடி கிரிக்கெட் வீரரான ஹென்ரிச் கிளாசன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். 33 வயதான இவர், முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தென் ஆப்பிரிக்கா அணியின் வெள்ளை பந்து தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இவருக்கு வெறும் 33 வயது மட்டுமே ஆன நிலையில், ஒரு வலிமையான வீரர் தென்னாபிரிக்க அணியில் இருந்து விலகி இருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் கிளாசனை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விலக்கி வைத்திருந்த நிலையில் அவரது முடிவு எதிர்பார்த்ததுதான் என பலர் கூறி வந்தனர். தற்போது அதற்கான காரணத்தை அவரே வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஓய்வுக்கான காரணம் இதுதான்
இதுகுறித்து அவர் கூறும்போது “என்னுடைய எந்த ஆட்டத்தை பற்றியும், அணி வெற்றி பெறுகிறதா இல்லையா? என்பது பற்றியும் எனக்கு உண்மையாக கவலை இல்லை என்பதை நீண்ட காலமாக உணர்ந்தேன். அந்த வகையான சிந்தனை இருப்பது தவறானது என்பதையும் உணர்ந்தேன். சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்பாக பயிற்சியாளர் ராப் வால்டர் இடம் நீண்ட நேரம் உரையாடினேன். என்ன நடக்கிறது என்பது குறித்தும் என் மனதில் என்ன இருக்கிறது என்பது குறித்தும் அவரிடம் தெளிவாக உரையாடினேன். இருப்பினும் தொடர்ந்து விளையாடுவது எனக்கு பிடித்தமானதாக இல்லை.
இதையும் படிங்க:32 ரன் 9 விக்கெட்.. டிஎன்பிஎல்-ல் அம்பயருடன் அஸ்வின் திடீர் சண்டை.. திண்டுக்கல் அணிக்கு நடந்த பரிதாபம்
நாங்கள் நன்றாக 2027-ம் ஆண்டுக்கான உலக கோப்பையில் விளையாடுவது குறித்தும் நன்றாக திட்டமிட்டோம். இருப்பினும் எங்கள் பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் குறித்து சரியான விதத்தில் முடிவடையவில்லை. எனவே அதுதான் நான் ஓய்வு பெறும் முடிவை மிகவும் எளிதாக்கியது” என்று தான் ஓய்வு பெற்றதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். ஒரு அதிரடியான ஆட்டக்காரர் தென்னாபிரிக்க அணியில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை மற்றும் தென்னாபிரிக்காவில் அதற்கு அடுத்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.






