நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்கு எதிராக திரும்ப, இந்தியாவில் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா கேப்டன் நேற்று டாஸ் ஜெயித்து தமது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடும் பொழுது ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த பிறகு தான் ஆடுகளம் பேட்டிங் செய்ய எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பது தெரியவந்தது. ஆடுகளத்தில் பந்து நின்று வந்த காரணத்தினால் பேட்ஸ்மேன்களால் சரியாகப் பந்தை நேரத்திற்கு அடிக்க முடியவில்லை.
இந்திய அணியில் 7 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கின்ற காரணத்தினாலும், ஆறாவது பேட்ஸ்மேனாக இருக்கக்கூடிய சூரிய குமார் யாதவ், இதுவரை இந்த உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தினாலும், இந்திய அணி நேற்று ஓர் இடத்தில் சிக்கிக் கொண்டது.
ரோகித் சர்மா ஆட்டமிருந்து உள்ளே வந்த ஸ்ரேயாஸ் உடனே ஆட்டம் இழந்ததும் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை 81 ரன்களுக்கு இழந்தது. இதனால் அடுத்து வெளியில் சூரியகுமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் மட்டுமே இருந்தார்கள்.
இதன் காரணமாக ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இதை மனதில் வைத்து பொறுமையாக விளையாட வேண்டி இருந்தது. மேலும் ஆடுகளமும் பேட்டிங் செய்வதற்கு சரியான வகையில் இல்லை.
இதனால் இந்த ஜோடியால் பௌண்டரிகள் அடிக்கவே முடியவில்லை. கேஎல் ராகுல் மட்டுமே மேக்ஸ்வெல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்தார். தாக்கி ஆடுவதற்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளும் இல்லாததால், ஆடுகளமும் ஒத்துழைக்காததால் இந்த ஜோடி மிகவும் தடுமாறியது.
இதுகுறித்து பேசி உள்ள இந்திய லெஜன்ட் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “போட்டி நடந்து கொண்டிருக்கும் போதும் சொன்னேன் இப்பொழுது முடிந்துவிட்ட பிறகும் சொல்கிறேன். கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி மேக்ஸ்வெல் மற்றும் ஹெட் ஆகியவரது ஓவர்களை ஏன் அடித்து விளையாடவில்லை. அவர்கள் இருவரும் பகுதிநேர பந்துவீச்சாளர்கள்தான். இவர்களுக்கு எதிராக ரன்கள் அடிக்க இந்தியாவின் இரண்டு பேட்ஸ்மேன்களும் முயற்சி செய்திருக்க வேண்டும்!” என்று கடுமையாகக் கூறி இருக்கிறார்!