“ரஷித் கானுவுடன் மைதானத்தில் ஏன் நடனம் ஆடினேன்?” – உண்மையை உடைத்து சொன்ன இர்பான் பதான்!

0
2356
Irfan

நேற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்றது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை விட பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி அவர்களுக்கு முக்கியத்துவம் ஆனதாக இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த நாட்டிலும் கொண்டாட்டங்கள் களைக்கட்டி இருக்கிறது. நேற்று இந்தியாவில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வானவேடிக்கைகள் துவங்கிவிட்டது.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் கொண்டாடியதை அடுத்து ஹோட்டலுக்கு செல்லும் பேருந்திலும் தங்களுடைய கொண்டாட்டத்தை தொடர்ந்தார்கள். அவர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தை நிறுத்தி விட்டார்களா? என்றும் தெரியாது. அந்த அளவிற்கு பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு முக்கியத்துவம் ஆப்கானிஸ்தான் தரப்பில் கொடுக்கப்படுகிறது.

மேலும் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சென்னை மாதிரியான மைதானத்தின் ஆடுகளத்தில் 283 ரன்கள் என்கின்ற இலக்கை விரட்டி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் அதை இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் துரத்துவது என்பது பெரிய விஷயம்.

- Advertisement -

இந்தக் காரணத்தினால் ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் முகாமில் மகிழ்ச்சி கரைபுரளும் நேரத்தில், பாகிஸ்தான் முகாமின் மீதான விமர்சனங்கள் மிக அதிகமாக வந்து விழுந்து கொண்டிருக்கிறது.

நேற்று வெற்றி பெற்றதும் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் மைதானத்தில் வலம் வந்த பொழுது, அங்கு தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அவருடன் இணைந்து நடனம் ஆடினார். இது நேற்று சமூக வலைதளத்தில் வைரலானது. தற்பொழுது ஏன் நடனம் ஆடினேன்? என்பதற்கான காரணத்தை அவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரஷித் கான் போட்டியில் வெற்றி பெற்றால் நடனம் ஆடுவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். நானும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் நடனம் ஆடுவேன் என்று வாக்குறுதி தந்திருந்தேன். எனவே நானும் நடனமாடினேன். ஆப்கானிஸ்தான் மீண்டும் வெற்றி பெறும் என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். நானும் மீண்டும் நடனமாடுவேன் என்று வாக்குறுதி தந்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!