இன்று ஐபிஎல் தொடரில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடந்து கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் 18 வயதான அங்கிரிஷ் ரகுவன்சிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு கொல்கத்தா அணி ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடிய கடந்த போட்டியில் அறிமுக வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பில் சால்ட் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பவர் பிளேவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நல்ல ரன் ரேட்டில் இருந்தது.
இந்த நிலையில் டெல்லியை பூர்வீகமாகக் கொண்டு மும்பை மாநில கிரிக்கெட்டில் விளையாடும் 18 வயதான வலதுகை பேட்ஸ்மேன் அங்கிரிஸ் ரகுவன்சி பேட்டிங் செய்ய வந்தார். வந்தவுடன் நோர்க்கியாவின் பந்துவீச்சில் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்து அதிரடியாக தொடங்கினார்.
இன்றைய போட்டியில் 25 பந்துகளில் அரைசதம் அடித்து, மொத்தம் 27 பந்துகள் சந்தித்து 5 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடைய பேட்டிங்கில் நல்ல கிளாசிக் டச் இருக்கிறது. அதே சமயத்தில் ஸ்விட்ச் ஹிட் போன்ற மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களும் அதிரடியாக விளையாடுகிறார்.
இவர் 2022 ஆம் ஆண்டு யாஸ் துல் தலைமையில் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரராக 278 ரன்கள் அடித்திருக்கிறார். இவர் மும்பை மாநில அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமான. எட்டு போட்டிகள் விளையாடி அதில் பெரிய புள்ளி விவரங்கள் இல்லை. அதே சமயத்தில் சிகே நாயுடு டிராபியில் 9 போட்டிகளில் 765 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க : அப்பீல் கேட்காம 85 ரன்.. 18 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் புது சரித்திரம்.. கேகேஆர்-க்கு 272 ரன் வாரி கொடுத்த டெல்லி
இவருடைய இளைய சகோதரர் கிரிசன். இவர் சிறுவயதில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இது குறித்து அவரது தாயார் கூறும் பொழுது “என்னுடைய இளைய மகன் மருத்துவமனையில் இருந்த பொழுது, அங்கிரிஷ் எங்களுடன்தான் தூங்குவார். சிகிச்சையில் இருந்த அந்த ஐந்து வருடங்கள் மிகவும் பயங்கரமானவை. தன் தம்பியை அவர் எப்பொழுதும் தனியாக விட மாட்டார். அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கடினமான வலிமையான மனம் அமைந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் கவனிக்கப்படும் இளம் வீரராக இவரும் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.