“எதே நாங்க பேஸ்பால் விளையாடறதா? நாலு பிளேயர் டீம்லயே இருக்க மாட்டாங்கபா” – அஷ்வின் ஓபன் பேச்சு!

0
437
Ashwin

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில், பிரண்டன் மெக்கலம் பயிற்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் புதியதாக ரசிகர்களை கொண்டு வந்து இருக்கிறது என்று சொன்னால் அது மிகை கிடையாது!

இந்த ஜோடியின் கீழ் ஒட்டுமொத்த இங்கிலாந்து டெஸ்ட் அணியும் சூழ்நிலைகளைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை விளையாடுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. களத்தில் இறங்கும் ஒவ்வொரு வீரர்களும் ஒரே மாதிரியான அதிரடி மனநிலையில் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வதே கிடையாது.

- Advertisement -

இவர்களின் இந்த அதிரடி அணுகுமுறையின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் பார்ப்பதற்கு மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. மேலும் எந்த சூழ்நிலையிலும் இங்கிலாந்து வெற்றியை நோக்கி மட்டுமே விளையாடுகின்ற காரணத்தினால், போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை. இதனால் போட்டித்தன்மை ரசிகர்களை கட்டிப் போடுகிறது.

இப்படியான காரணங்களால் உலகம் எங்கும் இங்கிலாந்து அணி டெஸ்ட் விளையாடுகிறது என்றால் கணிசமான கிரிக்கெட் ரசிகர்கள் அந்த போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். குறைந்தபட்சம் இங்கிலாந்து அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகள் குறித்து படித்து தெரிந்து கொள்ளவாவது விரும்புகிறார்கள். அந்த அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய ரசிகர்களை இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி கொண்டு வந்திருக்கிறது.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடுயூப் சேனலில் தமது அணியான இந்திய அணியும் இங்கிலாந்து போல அதிரடியாக பேஸ்பால் முறையில் விளையாடுமா? என்பது குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் சில விஷயங்களை மிகவும் வெளிப்படையாகவே போட்டு உடைத்திருக்கிறார். இந்திய அணியால் ஏன் பேஸ்பால் முறையில் விளையாட முடியாது? என்பது தெளிவாக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஒருவேளை இந்தியா ஒருகட்டத்தில் பேஸ்பால் முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறது என்று வைத்துக் கொள்வோம், ஹாரி புரூக் போல எல்லா பந்துகளுக்கும் பேட்டை வீசி அடித்து ஒரு வீரர் அவுட் ஆகிறார் என்றால், அந்தப் போட்டியில் இந்தியா தோற்கிறது என்றால், நாம் என்ன செய்வோம்? எங்கள் விளையாடும் அணியில் இருந்து குறைந்தது நான்கு ஐந்து வீரர்களையாவது உடனே நீக்கிவிடுவார்கள். இப்படித்தான் எங்களுடைய கலாச்சாரம் எப்பொழுதும் இருந்து வருகிறது. இதனால் மற்றவர்களின் விளையாட்டு பாணியை எங்களால் நகலெடுக்க முடியாது.

அது இங்கிலாந்துக்கு மட்டுமே வேலை செய்கிறது. ஏனென்றால் அவர்களது கிரிக்கெட் நிர்வாகம் இந்த பாணியில் முழுமையாக இறங்கி இருக்கிறது. தேர்வாளர்கள் இந்த வழியில் விளையாட அவர்களது வீரர்களை ஆதரிக்கிறார்கள். உண்மையில் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கும் அவர்களது கூட்டமும் மக்களும் அதை ஆதரிக்கிறார்கள். ஆனால் நம்மால் அதையெல்லாம் செய்ய முடியாது. எனவே நம்மால் இப்படி எல்லாம் விளையாட முடியாது!” என்று கூறியிருக்கிறார்!