பாகிஸ்தான் கிட்ட ருத்ரதாண்டவம் ஆடிய மாதிரி, விராட் கோலி எங்ககிட்ட ஆடமாட்டாரு – நெதர்லாந்து கேப்டன் பேச்சு!

0
31611

பாகிஸ்தான் அணியிடம் ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி, எங்களிடம் ஆடமாட்டார் என நினைக்கிறேன் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் தகுதிச் சுற்று முடிவடைந்து தற்போது சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது.

- Advertisement -

இரண்டாவது போட்டியை நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 25ஆம் தேதி இந்திய வீரர்கள் சிட்னி மைதானத்தில் வந்திறங்கி தங்களது பயிற்சியை துவங்கினர். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதேநேரம், ‘நெதர்லாந்து போன்ற அணியை கற்றுக்குட்டி அணியாக ஒருபோதும் நாங்கள் கருத மாட்டோம். உலக கோப்பைக்கு தகுதி பெற்று இருப்பதால், அவர்களை ஒருபோதும் எளிய அணியாக எண்ணிவிட முடியாது.” என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில்,

- Advertisement -

“பாகிஸ்தான் அணியிடம் விராட் கோலி விளையாடியது எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது. எங்களிடம் அதை அவர் விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். எங்களது பந்து வீச்சாளர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.” என்று பேட்டியளித்தார்.

மேலும் பேசிய அவர், “எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. ஆகையால் எங்கள் மீது அழுத்தமும் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை பெறுவதற்கு முழு முனைப்புடன் களமிறங்கி வருகிறோம். மிகப்பெரிய அணிகளாக கருதப்படும் அணிகளுடன் உலக கோப்பையில் விளையாடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம் என்பதே எங்களுக்கு முதல் பெருமிதம் தான்.” என்று நம்பிக்கையுடன் பேசினார்.