யாருக்கும் தெரியாமல் கோலி செஞ்ச காரியம்.. அடுத்த பந்தில் விக்கெட்.. குழம்பிய தென்னாப்பிரிக்கா.. நடந்தது என்ன?

0
954
Virat

ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், விக்கெட் வேண்டும் என்பதற்காக ஸ்டம்பின் மேல் இருந்த பைல்ஸை மாற்றி மேஜிக் செய்து பார்த்தார். இதனை பார்த்து ஆஸ்திரேலியா அணியின் லபுஷேன் சிரித்த நிலையில், அடுத்த பந்திலேயே பிராடுக்கு விக்கெட் வீழ்ந்தது. அதேபோல் ஆஷஸ்வின் கடைசி டெஸ்ட் போட்டியில் பிராட் செய்த பைல்ஸ் மேஜிக் ஒர்க் அவுட்டானது.

அதேபோல் விராட் கோலியும் பைல்ஸ் மேஜிக்கில் ஈடுபட்டுள்ளார். இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சுரியனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை சேர்த்தது. இதையடுத்து இரண்டாம் நாளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலின் அதிரடியான ஆட்டத்தால், இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

- Advertisement -

சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 137 பந்துகளில் 4 சிக்ஸ், 14 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் தனது 8வது சதத்தை நிறைவு செய்தார். அதேபோல் கேஎல் ராகுலின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸாக இது அமைந்துள்ளது. அவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்க்ரம் – எல்கர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் மார்க்ரம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் எல்கர் – சோர்சி கூட்டணி இணைந்து இந்திய பவுலர்களை பதம் பார்த்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் பும்ரா, சிராஜ், ஷர்துல், பிரசித் கிருஷ்ணா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதன்பின் உணவு இடைவேளைக்கு பின் எல்கரின் ஆட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 90 ரன்களை கடந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் பும்ரா – சிராஜ் பவுலிங் கூட்டணியை அட்டாக்கில் கொண்டு வந்தார். அப்போது விராட் கோலி, திடீரென அம்பயர் நின்றிருந்த பக்கம் உள்ள ஸ்டம்பின் பைல்ஸை மாற்றி வைத்தார்.

- Advertisement -

இதன் மூலம் விராட் கோலி பைல்ஸ் மேஜிக்கில் ஈடுபட்டதாக வர்ணனையில் கூறினர். ஆனால் பும்ரா வீசிய ஓவரில் சோர்சி 28 ரன்களிலும், அதன்பின் வந்த கீகன் பீட்டர்சன் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பைல்ஸில் ஏதோ மேஜிக் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் விராட் கோலி மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் பைல்ஸை மாற்றி வைத்து பார்த்த பின் விக்கெட்டுகள் சரிந்த புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் விராட் கோலி அடிக்கடி இதுபோன்ற மேஜிக்கில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.