சபாஷ் சரியான போட்டி… இந்தியாவுக்கு டஃப் கொடுக்கும் வெஸ்ட் இண்டீஸ் பேஸ்ட்மேன்கள்… முழிபிதுங்கும் அஸ்வின், ஜட்டு..! – 3ஆம் நாள் என்ன நடக்கிறது?

0
2055

இரண்டாவது டெஸ்டில் மூன்றாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விடாப்பிடியாக பேட்டிங் செய்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 229 ரன்கள் அடித்தது. கேப்டன் க்ரெய்க் பிராத்வெயிட் 75 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அரைசதம் அடிக்க, நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்தார்.

- Advertisement -

இதன் மூலம் முதல் இன்னிங்சை இந்திய அணி 438 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

துவக்க வீரர்களான பிராத்வெயிட் மற்றும் சந்தர்பால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். சந்தர்பால் 32 ரன்களுக்கு அவுட் ஆனார். இரண்டாம் நாள் முடிவில் 86 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இவர் 75 ரன்கள் அடித்து அஸ்வின் சுழலில் அவுட் ஆனார். அறிமுகவீரர் மெக்கன்சே கேப்டனுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். கடைசியில் இவரும் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.

- Advertisement -

மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் ஆங்காங்கே தடைப்பட்டது. அதன் பிறகும் மேலும் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது இந்திய அணி.

கடந்த போட்டியில் எளிதாக விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், இம்முறை இந்திய பந்துவீச்சாளர்களை நன்றாக எதிர்கொண்டு எளிதாக விக்கெட்டுகளை கொடுக்காமல் விடாப்படியாக பேட்டிங் வெளிப்படுத்தி வருகின்றனர். இது இந்திய பவுலர்களுக்கு கடும் சவாலை கொடுக்கிறது.

மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 229 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஜடேஜா இரண்டு விக்கெட்டுகள், அஸ்வின், சிராஜ் மற்றும் அறிமுக வீரர் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்திருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஆலிக் அதனஸ் 37 ரன்கள், ஹோல்டர் 11 ரன்கள் அடித்து களத்தில் இருந்தனர். தற்போது வரை 209 ரன்கள் பின்தங்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.