“நல்லாதான் ஆரம்பிக்கறோம்.. நல்லாதான் முடிக்கறோம்.. ஆனா நடுவுலதான்..!” – பாபர் அசாம் விரக்தி பேச்சு!

0
2993
Babar

ஆசியக்கோப்பைத் தொடர் 1984 ஆம் ஆண்டு முதல் 39 வருடங்களாக தொடர்ச்சி பெற்று இருக்கிறது. இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டது கிடையாது!

நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், இதே 39 வருட வரலாறு மாறாமல் தொடர்கிறது. பாகிஸ்தான அணி இதுவரை நடைபெற்ற ஆசியக்கோப்பை 16 தொடர்களில் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை இரண்டு நாடுகள் ஆசியக்கோப்பை தொடரில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய அணிகளாக இருக்கின்றன. பாகிஸ்தானுக்கு ஆசியக்கோப்பையில் நல்ல வரலாறு கிடையாது.

இந்த நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் இறுதிப்போட்டி என்கின்ற சூழ்நிலையில் போட்டியை சந்தித்தது பாகிஸ்தான். முதலில் பேட்டிங்கில் சரிவு உண்டானாலும், பிறகு முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமத் இருவரும் சேர்ந்து அமைத்த சத பார்ட்னர்ஷிப் காரணமாக, 42 ஓவர்களில் 252 ரன்கள் சேர்த்தது.

பிறகு 42 ஓவர்களில் இதே 252 ரன்களை எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு தரப்பட்ட இலக்கை, இலங்கை 42வது ஓவரின் கடைசிப் பந்தில் எட்டி, பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்று, 11-வது முறையாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

நடப்பு ஆசியக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி மிகவும் வலிமையான அணியாக உள்ளே வந்தது. தொடருக்கு சில நாட்கள் முன்புதான் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது.

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “இறுதியில் எங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களை நாங்கள் பந்துவீச வைக்க முடிவு செய்தோம். இறுதி ஓவருக்கு முன் ஓவரை ஷாகின் அப்ரிடி கையில் கொடுத்தோம். கடைசி ஓவர் குறித்து எங்களுக்கு ஜமான் கான் மீது நம்பிக்கை இருந்தது.

இலங்கை எங்களை விட நன்றாக விளையாடினார்கள். அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நாங்கள் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சரியாக இல்லை. அதனால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம்.

எங்களுடைய தோல்விக்கு முக்கியக் காரணமாக, நாங்கள் நன்றாக ஆரம்பித்தோம், நன்றாகவே முடித்தோம், ஆனால் மிடில் ஓவர்களில் சரியாக பந்து வீசவில்லை. இந்த நேரத்தில் குசால் மெண்டிஸ் மற்றும் சதீரா உண்டாக்கிய பார்ட்னர்ஷிப்புக்கு நாங்கள் நிறைய விலை கொடுக்க வேண்டியதாக ஆகிவிட்டது!” என்று கூறியிருக்கிறார்!