“இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து இருக்கலாம் ஆனால் எங்களது அணுகுமுறை மாறாது” – போட்டிக்கு பின் கே.எல் ராகுல் பேட்டி!

0
49

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் 6 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயட்ன்ஸ் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரவுண்டில் விளையாடுவதால் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய சென்னை அணிக்கு கான்வே மற்றும் ருத்ராஜ் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் ஆறு ஒவர்களிலேயே சூப்பர் கிங்ஸ் அணி 70 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி சிறப்பாக தொடங்கியது.

- Advertisement -

துவக்க வீரர்களான ருத்ராஜ் மற்றும் கான்வே முறையே 57 மற்றும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் அந்த அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக ஆடி 20 ஓவர்களுக்கு 217 ரன்களை சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு துவக்கம் சிறப்பாகவே அமைந்தது.

தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் சரிந்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லக்னோ அணியில் துவக்க வீரர் மேயர்ஸ் சிறப்பாக ஆடி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் மொயினளி சிறப்பாக பந்துவீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 25 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்திற்குப் பின் பேசிய கே.எல் ராகுல் “டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததற்கு எங்களுக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஆடுகளத்தில் இருந்த ஈர பதத்தின் காரணமாக வேக பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைத்தது ஆனால் நாங்கள் சரியான அளவில் பந்து வீசவில்லை. சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்களான தான்வே மற்றும் ருத்ராஜ் மிகச் சிறப்பாக ஆடினர். மேலும் எங்களின் பேட்டிங்கின் போது கிடைத்த துவக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. ரவி பிஸ்னாய் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவருடன் நிறைய போட்டிகளில் ஆடி இருக்கிறேன். எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ அந்த நேரங்களில் விக்கெட்டை எடுத்துக் கொடுக்கக்கூடிய பந்து வீச்சாளர் அவர். துவக்க வீரரான மேயர்ஸ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவர் அமைத்துக் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல தவறி விட்டோம். இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததில் எந்த தவறுமில்லை. நாங்கள் வெற்றி பெறவில்லை ஏனென்றால் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. சிறப்பான தொடக்கம் கிடைத்தது அதை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டும். அந்த வாய்ப்பையும் தவற விட்டோம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் ஆனால் எங்களது அணுகுமுறை மாறப் போவதில்லை இது டி20 கிரிக்கெட். இந்தத் தொடர் முழுவதும் இதே அணுகுமுறையுடன் தான் விளையாடப் போகிறோம்” எனக் கூறி முடித்தார்.