நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் நேற்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி மிக நெருக்கமான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் கடைசி பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த ஒரு காரியம், நிறைய பாராட்டுகளை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் 20 வயதான இளம் மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி வெறும் 42 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணியைக் காப்பாற்றினார். அவருடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாகவே ஹைதராபாத் சவாலான ஸ்கோருக்கு சென்றது.
இதற்கடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் சேர்ந்து 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை எளிதான நிலைக்கு கொண்டு வந்தார்கள். கடைசி நான்கு ஓவர்களுக்கு 41 ரன்கள் தேவை என்கின்ற நிலையில், பேட்ஸ்மேன்களும் கைவசம் இருந்து ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோற்றது.
நேற்றைய போட்டியில் புவனேஸ்வரர் குமார் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்துகளில் 11 ரன்கள் கிடைத்தன. அடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அந்தப் பந்தில் ரோமன் பவல் எல்பிடபிள்யு ஆக பரிதாபமான முறையில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட பொழுதும், புவனேஸ்வர் குமார் பந்தை ரிலீஸ் செய்யும் வரையில், ரவிச்சந்திரன் அஸ்வின் கிரீசை தாண்டாமல் நேர்மையாக உள்ளே நின்றார். வெற்றிக்காக பந்துவீச்சாளரை ஏமாற்றி, அவர் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இது அவுட் இல்லனாலும்.. ராஜஸ்தான் ரூல்ஸ் படி தோல்விதான்.. இது ஒரு போலியான விதி – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
மேலும் இப்படி முன்கூட்டியே பந்துவீச்சாளர்கள் முனையில் பேட்ஸ்மேன்கள் வெளியேறினால் நான் அவுட் செய்வேன் என்று தைரியமாக அதை எல்லா நேரமும் ரவிச்சந்திரன் அஸ்வின் செய்திருக்கிறார். இதற்காக பல விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக வந்த பொழுதும், கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட பொழுதும், தன்னுடைய கொள்கையில் மாறாமல், பவுலர் பந்தை ரிலீஸ் செய்யும் வரை கிரீசுக்குள் நின்று மிக நேர்மையாக செயல்பட்டு இருக்கிறார். எனவே அவருடைய பேச்சும் செயலும் ஒரே மாதிரி அமைந்திருக்கிற காரணத்தினால், ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்!