வாட்சனின் இடத்தை நிரப்ப ஐ.பி.எல் 2021 ஏலத்தில் சி.எஸ்.கே குறிவைக்க வேண்டிய 6 வெளிநாட்டு வீரர்கள்

0
579

ஐ.பி.எல் 2020, சி.எஸ்.கே அணிக்கு எதிர்ப்பார்த்த அளவு அமையவில்லை. 2008ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனை முடிவுக்கு வந்தது. இதற்கான காரணம் என்னவென்று கேப்டன் தோனியிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது “படகில் உள்ள ஒரு ஓட்டையை அடைக்கும் பொழுது மற்றொரு ஓட்டையில் இருந்து தண்ணீர் வரும் அதே போல் தான் எங்கள் அணியிலும் தொடக்க வீரர்களிடம் பிரச்சனை உள்ளது என அதை கவனித்தால் மிடில் ஆர்டரில் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் ஐக்கிய அரபு நாட்டிற்கு வந்த பிறகு, கொரோனா வைரஸால் சில வீரர்கள் பாதிக்கப்பட்டனர்; அவர்கள் அதில் இருந்து விரைவில் மீண்டு வந்து களத்தில் சிறப்பாக விளையாட சிரமப்பட்டனர்.” என்றார். நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாதது சி.எஸ்.கேவிற்கு இரண்டு கைகள் இல்லாதது போல் ஆகிவிட்டது .

39 வயதாகும் ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வாட்சன் 2018ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஐதரபாத் அணிக்கு எதிராக சதமடித்து சி.எஸ்.கே அணி கோப்பையை முத்தமிட முக்கியப் பங்காற்றினார். அதற்கு அடுத்து 2019ஆம் ஆண்டு, முதலில் சில போட்டிகளில் சொதப்பினாலும் கேப்டன் தோனி தன் மேல் வைத்த நம்பிக்கைக்கு இணங்க, இறுதிப்போட்டியின் பொழுது காலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்த நிலையிலும் அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராடிய வாட்சன் 80 ரன்கள் குவித்தார். இருப்பினும் ஒரு ரன் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

அப்படிப்பட்ட நல்ல இதயமுள்ள ஷேன் வாட்சன் இந்த ஆண்டு பெரிதாக ஜொலிக்கவில்லை. மேலும் நவம்பர் 2, 2020 அன்று ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார். இதனால் வாட்சனைப் போல் அடித்து ஆடக்கூடிய தொடக்க வீரரை சி.எஸ்.கே இழந்துள்ளது . அந்த இழப்பை நிறைவு செய்ய 2021ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் ஏலத்தில் இருந்து ஒரு சிறந்த வீரரை வாங்க வேண்டும்.

சிஎஸ்.கே பற்றி விவாதிக்க ஆரம்பிக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் ஆறு விருப்பங்கள் பின்வருமாறு:

1. டேவிட் மலன்:

- Advertisement -

சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வீரர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் மலன். இவர் 16 டி20களில் 682 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக 48.7 ரன்கள் மற்றும் 146.7 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர் ஆவார். இவர் நிச்சயமாக பெரிய தொகைக்கு விலை போவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சி.எஸ்.கே அணி இந்த வீரரை எடுப்பதில் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரு வேளை 2021ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணிக்கு விளையாட பட்சத்தில் , டாப் ஆர்டரில் அணிக்கு தேவையான இடதுகை பேட்ஸ்மேனாக டேவிட் மலன் அமைவார்.

2. மார்டின் கப்டில்:

ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். ஒரு நாள் போட்டியைப் போல டி20களிலும் நியூசிலாந்து அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் குறைந்த வாய்ப்புகளே கிடைத்த நிலையில், இவரால் தனது முழு திறமையை நிரூபிக்க இயலவில்லை. ஏலத்தில் இருந்து இவரை எடுத்தப் பிறகு வாட்சனைப்போல் இவருக்கும் நிறைய வாய்ப்புகள் கொடுத்தால், இவரிடம் இருந்து பெரிய அளவில் ரன்களை எதிர்பார்க்கலாம்.

3. காலின் முன்ரோ:

கப்டில்லைப் போல ஐ.பி.எலில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத மற்றொரு நியூசிலந்து வீரர் காலின் முன்ரோ. தனக்குக் கொடுத்த வாய்ப்புகளில் சரியாக விளையாடாமல் அணிக்கு ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் சர்வதேச டி20களில் மூன்று சதம் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவைப் போல் இவரும் ஒர் அளவிற்கு பந்து வீசுவார். இவரை ஏலத்தில் இருந்து எடுத்து அணியில் ஆட வைத்தால் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பார்.

4. ஷாய் ஹோப்: 

மேற்குஇந்திய நாட்டைச் சேர்ந்த இந்த ஷாய் ஹோப் ஒரு நாள் போட்டிகளில் சராசரியாக 50 ரன்கள் என்ற நல்ல புள்ளிவிவரங்களை வைத்துள்ளார். டி20களிலும் சர்வதேச அணிக்காக சிறப்பாகப் பங்களித்து உள்ளார். மேற்குஇந்திய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது, இந்திய மைதானத்தின் தன்மைக்கேற்ப துல்லியமாக விளையாடினார். மேலும் களத்தில் விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். ஆகையால், சி.எஸ்.கே அணிக்கு இவர் சரியான வீரராக இருப்பார்.

5. ஜேசன் ராய்:

இங்கிலாந்து அணி இமாலய இலக்கை துரத்தும் பொழுது தொடக்க வீரராக களமிறங்கி போட்டியில் பல அற்புதங்கள் செய்யும் திறமை கொண்டவர்.  கடந்த இரண்டு மூன்று  ஐ.பி.எல் ஏலத்தில் எந்த ஒரு அணியும் இவரின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை. நம்பிக்கை வைத்தால் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றியை தேடித் தருவார். அதனால் குறைந்த விலையில் இவரை எடுத்து அதிக லாபம் பெறலாம்.

6. எவின் லீவிஸ்:

2018ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தொடக்க வீரராக இறங்கி தரமாக விளையாடினார். சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ளார். இந்தியாவிற்கு எதிராகவும் ஒரு சதம் அடித்தார். மேற்குஇந்திய அணிக்கு  இவர் நல்ல தொடக்கங்களை அமைத்து , அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். டி20 போட்டிகளில் உயர்ந்த இடத்தில் உள்ள இவரை ஏலத்தில் எடுக்க சி.எஸ்.கே முயற்சிக்கலாம்.