பிக் பேஷ் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் இன்று மோதின. போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஆரம்பத்தில் சற்று நிதானமாக விளையாடினாலும் பின்னர் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே குவித்தது. போட்டியின் இறுதியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இறுதி ஓவரில் நடந்த நாடகம்
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் முதலில் பேட்டிங் செய்த பொழுது இறுதி ஓவரில் ஒரு நாடகம் அரங்கேறியது. இறுதி ஓவரில் டிம் டேவிட் மிக சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார். இறுதி ஓவரில் 5-வது பந்தை மேற்கொண்ட அவர் ரன் ஓட முயற்சித்தார். ஆனால் அவர் வேண்டுமென்றே எதிர்முனை கிரீஸில் பேட்டை வைக்காமல், மீண்டும் தனது பேட்டிங் கிரீஸுக்கு வர முயற்சித்தார்.
வேண்டுமென்றே பேட்டை அவர் கிரீஸில் படாமல் செய்ததற்கு மிக முக்கிய காரணம், இறுதி பந்தை அவர் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. ஸ்டிரைக்கில் நின்று இறுதி பந்தை பிடிப்பதற்காக அவர் வேண்டுமென்றே அவ்வாறு நாடகமாடினார். இதை கவனித்த நடுவர்கள் அந்த அணியின் ஸ்கோரில் இருந்து 5 ரன்களை பெனால்டியாக பறித்துக் கொண்டனர்.
Stars will start their innings with 5 free runs courtesy of this… #BBL11 pic.twitter.com/lz9tRxNLLB
— KFC Big Bash League (@BBL) December 24, 2021
20 ஓவர் முடிவில் 180 ரன்கள் அந்த அணி எடுத்திருந்த நிலையில் 5 ரன்கள் போன காரணத்தினால் அந்த அணியின் ஸ்கோர் 175 ரன்கள் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தாலும், டிம் டேவிட் இறுதி பந்தை மேற்கொள்வதற்காக நடத்திய நாடகம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. வேண்டுமென்றே அவ்வாறு அவர் ஓடிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.