தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னைக் கவர்ந்த மூன்று முக்கிய ஆல் ரவுண்டர்களை முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லஷ்மன் பட்டியலிட்டுள்ளார். கிரிக்கின்ஃபோ வலைத்தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் இதைக் கூறியுள்ளார் லக்ஷ்மன்.
முதலில் தன்னை முழுமையாக கவர்ந்த ஆல் ரவுண்டர் என்றால் அது பென் ஸ்டோக்ஸ் தான் என்று குறிப்பிட்டுள்ளார் லக்ஷ்மன். இது குறித்து கூறுகையில் ஒரு ஆல் ரவுண்டர் என்பவர் முழு நேர பேட்டிங்கிலும் அணிக்கு பங்களிக்க வேண்டும். அதே நேரத்தில் முழு நேர பந்து வீச்சிலும் பங்களிக்க வேண்டும். அதை தற்போது ஸ்டோக்ஸ் சிறப்பாக செய்து வருகிறார். அவரால் முழு நேர பேட்டிங் வீரராகவும் ஆட முடியும் முழு நேர பந்து வீச்சாளராகவும் ஆட முடியும். இது தான் ஒரு ஆல் ரவுண்டருக்கு அழகு எனக் கூறினார் லக்ஷ்மன். ஸ்டோக்ஸ் இது வரை டெஸ்ட் போட்டிகளில் 4631 ரன்களும் 163 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இரண்டாவதாக தன்னைக் கவர்ந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் எனக் கூறியுள்ளார். ஹோல்டரால் தற்போது சரியாக பேட்டிங் ஆட முடியவில்லை என்றாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சிறந்த பந்து வீச்சாளராக இருந்து வருகிறார் எனக் கூறினார் லக்ஷ்மன். ஹோல்டர் இது வரை 49 ஆட்டங்களில் 2287 ரன்களும் 129 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மூன்றாவதாக அவர் குறிப்பிட்டது இந்திய அணியின் ரவீந்தர ஜடேஜா. கடந்த சில ஆண்டுகளாக ஜடேஜாவின் ஆட்டம் பன்மடங்கு மேம்பட்டுள்ளதென லக்ஷ்மன் கூறியுள்ளார். முதல் டெஸ்ட்டில் அவர் அடித்த அரை சதம் அவர் எவ்வளவு மேம்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது. முன்பு எல்லாம் சிறிய சிறிய இன்னிங்ஸ் மட்டுமே ஆடும் ஜடேஜா இப்போது பெரிய இன்னிங்ஸ்கள் ஆடக் கற்றுக்கொண்டு விட்டார் எனக் கூறினார் லக்ஷ்மன். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தி வருகிறார். 2019 ராஜ்கோட் டெஸ்ட்டில் சதம் அடித்த பிறகு மைதானத்தின் எல்லா பக்கமும் ரன் அடிக்க கற்று விட்டதாக லஷ்மன் பாராட்டியுள்ளார்.