நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கும் நிலையில் விராட் கோலி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து விராட் கோலி அவ்வளவு ஆக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் தரவரிசையில் அவருடைய இடம் சரிந்து கொண்டு சென்றது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பார்ம்க்கு திரும்பிய விராட் கோலி, கடைசி மூன்று சதம் அடித்து இருக்கிறார்.
இதன் மூலம் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் கோலி 2 இடம் முன்னேறி, பட்டியலில் 6வது இடத்தில் இருந்து விராட் கோலி தற்போது 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 887 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா வீரர் வெண்டர் டுசன் 766 புள்ளிகள் உடன் 2வது இடத்திலும், குயின்டன் டி காக் 759 புள்ளிகள் உடன் 3வது இடத்திலும், விராட் கோலி 750 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருக்கிறார்.
விராட் கோலி நியூசிலாந்து தொடரில் மீண்டும் சதமோ, அரைசதமோ விளாசினால் அவர் 2வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கோலியை தவிர ரோகித் சர்மா தரவரிசையில் 10வது இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளருக்கான பட்டியலில் இலங்கை தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முகமது சிராஜ் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சிராஜை தவிர மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் முதல் பத்து இடத்தில் இல்லை. இதேபோன்று டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 908 புள்ளிகளை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். இதன் மூலம் 900 புள்ளிகளை பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆல்ரவுண்டருக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா 3வது இடத்தில் இருக்க, இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இல்லை. இந்த ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றால் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு செல்லும்.