வீடியோ.. வெறும் 1 ஃபோர்.. 100 ரன்.. கப்தில் டி20 போட்டியில் விசித்திர சாதனை.. சிபிஎல்-ல் அபாரம்!

0
2858
martin guptill CPL

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் தீவுக் கூட்டத்தில் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர், ஆறு அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி உள்ள நிறுவனம், இந்தத் தொடரில் ட்ரின்பாகோ அணியை வாங்கி இருக்கிறது. நேற்று ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாரபடோஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ட்ரின்பாகோ அணிக்கு துவக்க வீரர்களாக வந்த மார்ட்டின் கப்தில் மற்றும் மார்க் தேயல் இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். மார்க் தேயல் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால் ஒருமுனையில் நின்ற துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். 58 பந்துகளை சந்தித்த அவர் 100 ரன்கள் எடுத்தார். கேப்டன் கீரன் பொல்லார்ட் 46 (32) எடுக்க 20 ஓவர்கள் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் வந்தது. ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படோஸ் ராயல்ஸ் அணி 12.1 ஓவரில் 61 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் துவக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். சலாம்கேயில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்த போட்டியில் மார்ட்டின் கப்தில் அடித்த சதம் எந்த வகையில் சிறப்பானது என்றால், அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, ஒன்பது சிக்ஸர்கள் நொறுக்கி, இந்த சதத்தை கொண்டு வந்திருக்கிறார். இந்த வகையில் இதற்கு முன்னால் மூன்று பேட்ஸ்மேன்கள் ஒரு பவுண்டரி மட்டும் அடித்து சதம் விளாசி இருக்கிறார்கள்.

2014ஆம் ஆண்டு நமிபியா அணிக்கு எதிராக நிக்கி வான் டென் பெர்க் ஒரு பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் விளாசி சதம் அடித்திருந்தார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கிறிஸ் கெயில் 2018ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக, ஒரு பவுன்டரி, 11 சிக்ஸர்கள் மூலம் சதம் அடித்தார்.

2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து விளையாடும் வில் யங் கேன்டர்பரி அணிக்கு எதிராக சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட் அணிக்காக ஒரு பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் மூலம் சதம் அடித்திருந்தார். தற்பொழுது மார்ட்டின் கப்தில் ஒரு பவுண்டரி 9 சிக்ஸர்கள் மூலம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!