இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் இடம் என்பது சச்சின் டெண்டுல்கர் இல்லாத தனித்த இடம். அவருடைய இடத்தை இன்னொரு வீரர் இந்திய கிரிக்கெட்டில் இனி நிரப்புவது என்பது கடினமான காரியம்.
சச்சின் காலத்தில் கங்குலி உடன் இணைந்து அறிமுகமான ராகுல் டிராவிட், பிற்காலத்தில் கங்குலி கேப்டன் ஆன பொழுது, துணை கேப்டனாக இருந்து கேப்டனுக்கும் வீரர்களுக்கும் நடுவில் பாலமாக அமைந்தார்.
கங்குலி செய்ய நினைக்கும் எல்லா காரியங்களையும் முன்னின்று வீரர்களுக்கு உணர்த்தி அணியை சிதறவிடாமல் வைத்திருந்தார். அணி வீரராக எப்பொழுதும் அவர் தன்னுடைய ஈகோவை யாரிடமும் வெளிப்படுத்தியது கிடையாது.
அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் சச்சின் தேவை இந்திய அணிக்கு எவ்வளவு இருந்ததோ அதே தேவை ராகுல் டிராவிட் இடமும் இருந்தது. எவ்வளவு கடினமான கட்டங்களில் இருந்தும் அணியை மீட்டுச் செல்லக்கூடிய மனவலிமை ராகுல் டிராவிட்டுக்கு மிக அதிகம். இதற்கு நல்ல உதாரணமாக லட்சுமணன் உடன் இணைந்து அன்றைய ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கொல்கத்தாவில் செய்த சம்பவம் சாட்சி.
மேலும் ஒரு வீரராக இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் மிகச் சிறப்பாக செய்துவிட்ட போதிலும், இந்திய கிரிக்கெட் மேல் கொண்டுள்ள அளவற்ற பற்றின் காரணமாக, இளம் இந்திய வீரர்களை உருவாக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்திய கிரிக்கெட்டில் ஒரு நட்சத்திர வீரர் இந்த இடத்திற்கு வருவது என்பது இனி நடக்குமா என்று தெரியாது. மேலும் கங்குலியின் வற்புறுத்தல் காரணமாகவே தற்பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் இவருடைய 18 வயதான மகன் சமித் டிராவிட்டும் ஒரு கிரிக்கெட்டராக உருவாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த எந்த சத்தமும் மீடியாவில் இருக்காது. அந்த அளவிற்கு டிராவிட் கொண்டு செல்வது கிடையாது.
இந்த நிலையில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கூச் பெஹார் டிராபி நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக கர்நாடக அணிக்கு சமீத் டிராவிட் 98 ரன்கள் அடித்திருக்கிறார்.
தற்பொழுது அந்த போட்டியில் அவர் அடித்த சில ஷாட்கள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அதைப் பார்க்கும் பொழுது அவரது தந்தையின் பேட்டிங் நேர்த்தி அப்படியே வெளிப்படுகிறது. எதிர்காலத்தில் சமீத் டிராவிட்டுக்கு இந்திய கிரிக்கெட்டில் ஒரு இடம் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
Samit Dravid scored 98 runs against Jammu and Kashmir in Cooch Behar Trophy. (U19).pic.twitter.com/rJkEWYFnfp
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 20, 2023