வீடியோ.. 6,6,6,6.. 3 சிக்ஸ் 100 மீட்டருக்கு மேல்.. பொல்லார்டு அதிரடியில் அம்பதி ராயுடு அணி தோல்வி!

0
3720
Pollard

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் ஆறு அணிகளைக் கொண்டு, கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் ஒரு அணியை வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த டி20 தொடரில் நேற்று கீரன் பொல்லார்டு தலைமையிலான கேகேஆர் அணி நிர்வாகம் வாங்கியுள்ள ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், ரூதர்போர்டு தலைமையிலான செயின்ட் கிட்ஸ் நேவிஸ் பேட்ரியார்ட்ஸ் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இதில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் கிட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த இந்திய வீரர் அம்பதி ராயுடு இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சர்வதேச வீரர் எவின் லீவிஸ் 10 ரன்னில் வெளியேறினார்.

மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரே பிளட்சர் 17 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஐந்தாவது வீரராக வந்த கேப்டன் ரூதர்போர்டு 38 பந்தில் எட்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 62 ரன்களும், கார்பின் போஸ்ச் 21 பந்தில் 31 ரன்களும் எடுக்க, செயின்ட் கிட்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. சுனில் நரைன் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு சாட்விக் வால்டன் 6, மார்ட்டின் கப்தில் 7 இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள்.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி வீரர் நிக்கோலாஸ் பூரன் மற்றும் அயர்லாந்தின் லார்கன் டக்கர் இருவரும் அதிரடியான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நிக்கோலஸ் பூரன் 32 பந்தில் ஐந்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 61 ரன்களும், லார்கன் டக்கர் 31 பந்தில் 36 ரன்களும் எடுத்தார்கள்.

இவர்களுக்கு அடுத்து அணியின் கேப்டன் கீரன் பொல்லார்டு மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரும் ஜோடி சேர்ந்து 17.1 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தார்கள். கீரன் பொல்லார்டு 16 பந்தில் ஆட்டம் இழக்காமல் 5 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள், ஆண்ட்ரே ரசல் 8 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 23 ரன்கள் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியின் போது கேப்டன் கீரன் பொல்லார்ட் இஸ்ரனுல்லாஹ் நவீத் வீசிய ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து, அந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் மீண்டும் தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு நொறுக்கினார். இதில் முதல் மூன்று சிக்ஸர்கள் 101, 107, 102 மீட்டருக்கு பறந்தன. நான்காவது சிக்ஸர் 95 மீட்டருக்கு பறந்தது!