தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் வெங்கடேஷ் ஐயர் 2022 ஆம் ஆண்டு தனக்கு எப்படி மோசமாக அமைந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த ஏலத்தின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெங்கடேஷ் ஐயர் வாங்குவதற்கு கேகேஆர் அணி உடன் கடுமையாக மோதியதால் அவரது விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது.
ஷாருக் கான் சொன்னது நடந்தது
இது குறித்து வெங்கடேஷ் ஐயர் பேசும்போது “2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் என்னை தேர்வு செய்யலாம் என்கின்ற பேச்சுகள் வெளிவந்து கொண்டிருந்தன. அப்பொழுது நான் கையில் இருந்த விளையாட்டை பற்றி யோசிக்காமல், டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாவது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் சொந்த ஆட்டம் மற்றும் உலக கோப்பை இந்திய அணியில் இடம் இரண்டையும் தவறவிட்டேன்”
“அந்த அனுபவம் எனக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எட்டு மாத காலம் காயத்தில் இருந்தபொழுது அது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. சில நேரங்களில் நாம் அசாதாரணமான ஒன்றை பெறுவதற்காக, கையில் இருக்கக்கூடிய சிறந்ததை மறந்து விடுகிறோம். இதை நான் சொல்லவில்லை ஷாருக் கான் என்னிடம் சொன்னார். என் வாழ்க்கையில் அவர் சொன்னது அப்படியே நடந்தது”
மெகா ஏலம் என் வாழ்க்கையை மாற்றியது
“இந்த வருடம் மெகா இடத்தில் நான் அதிக விலைக்கு சென்றது என் வாழ்க்கையை மாற்றிய தருணமாக அமைந்தது. நான் பொருளாதாரத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன். அவ்வளவு பணம் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். கேகேஆர் மற்றும் ஆர்சிபி எனக்காக ஏலத்தில் போட்டியிட்ட பொழுது கலவையான உணர்ச்சிகள் இருந்தன. அதே சமயத்தில் இரண்டு அணிகள் என் மீது நம்பிக்கை வைக்கும் விதமாக நான் நல்லதை செய்திருக்கிறேன் என்று நினைத்தேன்”
இதையும் படிங்க : ஐபிஎல் முதல் மேட்ச்.. ஆர்சிபி கேகேஆர் உத்தேச பிளேயிங் XI.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? – முழு அலசல்
“அதே சமயத்தில் எனக்கு இவ்வளவு தொகைக்கு ஏலத்தில் சென்று இருப்பதால் அழுத்தம் இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன். கூடுதல் விலைக்கு சென்று இருப்பதால் எனக்கு அழுத்தம் மட்டும் இல்லாமல் கூடுதல் பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் போட்டி தொடங்கியவுடன் அங்கு எதுவுமே முன்னால் வரப்போவது கிடையாது. நான் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரராக இருந்தாலும் சரி 20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரராக இருந்தாலும் சரி, நான் செய்யும் வேலை மாறாமல் அப்படியே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






