“இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட.. என்னை பத்தி தப்பா யாரோ பரப்பறாங்க” – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி குற்றச்சாட்டு

0
81
Varun

ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டில் திடீரென மர்ம சுழற் பந்துவீச்சாளர் என்று வருண் சக்கரவர்த்தி பெயர் பலராலும் பரவலாக உச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக அவருடைய முதல் ஐபிஎல் சீசனிலேயே பஞ்சாப் அணிக்கு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்.

பஞ்சாப் அணியின் பாரம்பரிய படி அடுத்த வருடமே அவர் கழட்டி விடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரைக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 2020 ஆம் ஆண்டு வருண் சக்கரவர்த்தி 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு அவர் 18 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனால் அவருடைய இடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிரந்தரமாக மாறியது. தற்போது வரை அவர் அந்த அணியால் தக்கவைக்கப்பட்டு தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து அவரை தேர்வு செய்தார்கள். ஆனால் மூன்று வாய்ப்பைப் பெற்ற அவரால் விக்கெட் வீழ்த்தவே முடியவில்லை.

இதற்கு அடுத்து அவருக்கு ஒரு காயம் ஏற்பட, அதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருடைய செயல்பாடு பெரிய அளவில் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்து மிகச் சிறப்பாக திரும்பி வந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் கடைசி கட்ட ஓவர்களை கூட மிகச் சிறப்பாக வீசி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் வரும் சக்கரவர்த்தி இந்திய அணியில் தனது இடம் குறித்து பேசும் பொழுது ” 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை முடிந்த பிறகு, எனக்கு ஏற்பட்ட காயம் மிகவும் சிறியது. நான் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் காயத்தில் இருந்து திரும்ப வந்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிறகு நான் இந்திய அணியில் இருந்து தொடர்ச்சியாக ஓரம் கட்டப்பட்டேன்.

ஆனால் தொடர்ந்து நான் காயத்தில் இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டன. இந்திய அணியில் இருந்து நான் ஓரங்கட்டப்படுவதற்கு யார் இப்படி செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடையவாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. இது நிச்சயம் கடினமானதாக நியாயமற்றதாக இருக்கிறது.

எனக்கு 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் நல்லதாக அமையவில்லை. காரணம் நான் 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களில் இருந்தேன். இதனால் நான் என்னை நிரூபிக்க நினைத்தது செய்த விஷயங்கள் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தவறாக போயின. என் மன அமைதி பாதித்த காரணத்தினால் என்னுடைய வழக்கமான பந்துவீச்சை கூட என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.

இதையும் படிங்க : “ஐபிஎல் 2024.. முதல் 4 இடமா?.. கடைசி 4 இடத்துலதான் இந்த டீம் வரும்” – கவாஸ்கர் மதிப்பீடு

நான் அங்கிருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டேன். எனக்கு என்னுள் என்ன நடக்கிறது என்பது தெளிவாக புரிந்தது. இப்போது விரக்தி அடையவில்லை. எல்லாமே மிகக் கூலாக இருக்கிறது. என்னை சுற்றிய விஷயங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது புரிகிறது. எனக்கு தற்பொழுது எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. என் வழியில் எது வந்தாலும் பார்க்கலாம், என்னால் முடிந்ததைச் செய்யலாம் என்று இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.