டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்துள்ள 4 பந்து வீச்சாளர்கள்

0
114
Tim Southee and Yuzvendra Chahal

ஒரு செசனில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மாறும்,
ஒரு ஐந்து ஓவர்களில் ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மாறும்.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டி மாற ஒரு ஓவர் தேவையில்லை, இறுதிக்கட்ட ஓவர்களில் வீசப்படும் ஒரு பந்து போதும். அந்தப் பந்தில் அடிக்கப்படும் ஒரு சிக்ஸர் போதும். இப்படி ஒரு பந்தில் ஆட்டமே மாறிப்போகிற டி20 போட்டிகளில், அதிக சிக்ஸர்களை தங்கள் பந்துவீச்சில் வழங்கிய நான்கு பந்துவீச்சாளர்களைப் பற்றியே, இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்!

இஷ் சோதி

இந்த நியூசிலாந்து லெக்-ஸ்பின் பவுலர் 66 டி20 போட்டிகளில் 92 சிக்ஸர்களை வழங்கி இருக்கிறார். டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் நம்பர் 1 பவுலர் என்ற உயரத்தில் இவர் சிலகாலம் இருந்திருக்கிறார். தற்போது அந்த இடத்தை இவர் இழந்துவிட்டாலும், நியூசிலாந்து டி20 அணியின் சுழற்பந்துவீச்சு துறையில் ஒருவராகவே உள்ளார். மேலும் நியூசிலாந்தின் சிறிய மைதானங்களில் அதிகம் விளையாடினாலும், இவரது பந்துவீச்சு எகானமி ஓவருக்கு 8.05 ரன் என்று கட்டுப்பாடாகத்தான் இருக்கிறது.

- Advertisement -
அடில் ரஷித்

இந்த இங்கிலாந்து வீரரும் லெக்-ஸ்பின்னர்தான். 73 போட்டிகளில் 92 சிக்ஸர்களை வழங்கி இருக்கிறார். லெக்-ஸ்பின்னில் நல்ல கூக்ளியை வீசக்கூடிய இவர், இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கான நம்பிக்கையான ஒரே ஸ்பின்னராக இருந்து வருகிறார். அதிக சிக்ஸர்களை வழங்கிய வீரர்கள் பட்டியலுக்குள் இவர் இருந்தாலும், இவரது பந்து வீச்சு எகானமி ஓவருக்கு 7.26 ரன்கள்தான்!

யுஸ்வேந்திர சாஹல்

இவர் இந்தப் பட்டியலில் இடம்பெறும் மூன்றாவது லெக்-ஸ்பின்னர். இந்திய அணி வீரரான இவர் 56 போட்டிகளில் 96 சிக்ஸர்கள் வழங்கி இருக்கிறார். பந்தை மெதுவாகக் காற்றில் தூக்கிப்போட்டு, அடிப்பதற்கு பேட்ஸ்மேனுக்கு ஆசைக்காட்டி, பவுண்டரி எல்லைக்கோட்டு அருகிலோ, எட்ஜ் எடுக்க வைத்தோ கேட்ச் மூலம் விக்கெட் வீழ்த்துவது இவரது பாணி. இதனால் இவர் பந்துவீச்சில் சிக்ஸர்கள் அடிக்கடி பறப்பது வாடிக்கையே. இருந்தாலும் இவரது பந்துவீச்சு எகானமி மோசமான நிலைக்குச் செல்லாமல், ஓவருக்கு 8.24 ரன் என்ற அளவில் மத்திமமாகவே உள்ளது!

டிம் சவுதி

இந்த நியூசிலாந்து வீரர் இந்தப் பட்டியலில் இடம்பெறும் ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 92 போட்டிகளில் 99 சிக்ஸர்ளை வழங்கி, அதிக சிக்ஸர்கள் வழங்கிய பந்துவீச்சாளரில் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் பந்துவீச்சு துறைக்குத் தலைமைத் தாங்கும் இவர், டி20 போட்டிகளில் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்துவீசுகிறார். எனவே சிக்ஸர்கள் அடிக்கப்படுவது சாதாரணமே!

- Advertisement -