டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்பித்த காலத்தில் இந்திய அணி பெரிதாக சிறப்பிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் தென் ஆப்ரிக்கா அணி அப்பட்டியலில் இணைந்தது. இந்திய அணியின் டெயில் எண்டர்ஸ் அதாவது பந்துவீச்சாளர்களால் பேட்டிங்கில் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இது இந்திய அணிக்கு பெரிய குறைபாடாக இருந்தது. அனைத்து வித ஃபார்மட்டிலும் கடினமான ஒன்று டெஸ்ட் கிரிக்கெட் தான். இந்த வடிவில் பவுலர்கள் விக்கெட்டை பறி கொடுக்காமல் ஆடுவது சவாலான விஷயம். மெதுவாக பேட்டிங்கில் ஓரளவு ரன்கள் சேர்க்ககூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர். அவர்களில் மூவர் இந்த வடிவில் சதமும் விளாசியுள்ளனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.
அனில் கும்ப்ளே
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் நட்சத்திர ஸ்பின்னரான அனில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி பல ஆண்டுகளுக்குப் பின் அவர் இதை நிகழ்த்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் சேர்த்து இந்திய அணியை 664 ரன்கள் வரை அழைத்துச் சென்றார். பவுலிங்கில் இரு இன்னிங்ஸும் சேர்த்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். போட்டி டிராவில் முடிய கும்ப்ளே ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அஜித் அகர்க்கர்
அஜித் அவர்க்கர் பல முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகியுள்ளார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் அவரிடம் பேட்டிங் திறனும் தென்பட்டது. ஆனால் அதை அவரால் சரியாக வெளிக்காட்ட இயலவில்லை. இறுதியாக கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2002ஆம் ஆண்டு தன் ஒரே டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் சேர்த்தார். இருப்பினும் அப்போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஹர்பஜன் சிங்
ஆப் ப்ரேக் பவுலரான ஹர்பஜன் சிங் பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்படுவார் என்பதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை சதம் விளாசியுள்ளார். அந்த 2 சதங்களும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்தடுத்து அடித்தார். 2010ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் 115 ரன்கள் சேர்த்தார். அதே வேகத்தில் உடனே ஹைதராபாத்தில் நடைபெற்ற அடுத்த போட்டியின் முதல் இன்னிங்சில் விக்கெட்டை பறிகொடுக்காமல் 111 ரன்கள் சேர்த்து தன் இரண்டாவது சதத்தை அடைந்தார்.