இன்று ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்த திலக் வர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
திலக் அற்புதமான சேஸிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பர்கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி பவர் பிளேவில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து ஒருமுனையில் மிகச்சிறப்பாக விளையாடிய திலக் வர்மா இந்திய அணியின் வெற்றியை கடைசிவரையில் நின்று உறுதி செய்தார். அவர் 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கம்பீர் சொன்ன வார்த்தைகள்
இந்த வெற்றி குறித்து திலக் வர்மா பேசும் பொழுது ” போட்டியில் நிறைய அழுத்தம் இருந்தது. பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தார்கள். அவர்கள் வேகத்தில் மாறுதல் செய்து சிறப்பாக வீசினார்கள். நான் களத்தில் மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். சஞ்சு மற்றும் துபே இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களுடைய ஆட்டம் எனக்கும் அணிக்கும் உதவியாக இருந்தது”
இதையும் படிங்க : 8 பந்து 4 விக்கெட்.. ஆசிய கோப்பையில் குல்தீப் யாதவ் அசத்தல் சாதனை.. ரசிகர்களை வெறுப்பேற்றிய பாகிஸ்தான்
“கம்பீர் பாய் என்னிடம் எந்த இடத்தில் விளையாடினாலும் அதற்கு ஏற்ற வகையில் விளையாடும் படி நெகிழ்வாக இருக்க வேண்டும் என சொல்லி இருந்தார். எனவே நான் இந்த மாதிரியான சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் கடுமையான முறையில் பயிற்சிகள் செய்து தயாராகி இருந்தேன். அது எனக்கு கடினமான நேரத்தில் உதவி இருக்கிறது. அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






