இன்று ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் குல்தீப் யாதவின் அபார சாதனையால் பாகிஸ்தான் அணி சுருண்டது.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடாததால் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அபார தொடக்கம்
முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதிரடியாக கிடைத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பர்கான் 38 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்தார். அவருக்கு இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டாவது அரைசதமாக அமைந்தது.
இதை தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் 35 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி முதல் 81 ரன்னுக்கு விக்கெட் இல்லாமல் விளையாடிய காரணத்தினால் 200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குல்தீப் சாதனை கலக்கல்
இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த குல்தீப் யாதவ் தன்னுடைய கடைசி 8 பந்துகளில் பகார் ஜமான், சல்மான் அலி ஆகா, ஷாகின் அப்ரிடி, பாஹிம் அஷ்ரப் என அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் பும்ரா இரண்டு விக்கெட் கைப்பற்ற பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை பைனல்.. சூரியகுமார் கம்பீர் எடுத்த வினோத முடிவு.. இந்திய ரசிகர்கள் கவலை – என்ன நடந்தது?
இந்த போட்டியில் நான்கு விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக இந்த ஆசியக் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் 16 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு ஆசியக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.






