அவ்வளவு சொன்னீங்களே கேஎல் ராகுல்.. ரிங்கு சிங்கை கழற்றிவிட்ட இந்திய அணி.. திலக் வர்மாவை சேர்த்து ஏன்?

0
280

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. ஜொஜன்னஸ்பர்க் மைதானத்தில் தொடங்கியுள்ள முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் சாய் சுதர்சன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டார்.

அவருக்கு இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் கேப்பை கொடுத்து வாழ்த்தினார். டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்பது பிசிசிஐ தெளிவுடன் இருப்பதால், சாய் சுதர்சன் அறிமுகம் முதல் போட்டியிலேயே நடைபெற்றுள்ளது. அதேபோல் அவர் தொடர்ந்து அபாரமான ஃபார்மில் ரன்களை குவித்து வந்தார்.

- Advertisement -

ஆனால் இந்திய டி20 அணியில் தொடர்ந்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேஎல் ராகுல் பேசிய போது, ரிங்கு சிங்கின் நிதானமும், பொறுமையும் டிவில் பார்க்கும் போதே ஆச்சரியமளித்ததாக கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய டி20 அணியின் புதிய ஃபினிஷராக ரிங்கு சிங் ஏற்கனவே உருவாகிவிட்டார். எந்த நேரத்திலும் அதிரடியாக ஆடும் திறமையை கொண்டுள்ள ரிங்கு சிங், விரைவில் இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களுக்குமான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமாகுவார் என்று பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிங்கு சிங் இந்திய ஒருநாள் அணியின் ஃபினிஷர் ரோலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரை சேர்த்ததால், ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திலக் வர்மாவால் சில ஓவர்கள் பவுலிங் செய்ய முடியும்.

அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய 5 பவுலர்கள் மட்டுமே இருப்பதால், 6வது பவுலராக திலக் வர்மாவால் செயல்பட முடியும். ஏற்கனவே டி20 போட்டிகளில் திலக் வர்மா சில விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இதனால் ரிங்கு சிங்கின் ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் தாமதமாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.

- Advertisement -