16 வருட ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்ட நிகழ்வுதான், மிகப்பெரிய ஆச்சரியமான பரபரப்பான நிகழ்வாக அமைந்தது.
இந்த டிரேடிங் நிகழ்வில் மிகக் குறிப்பாக ஹர்திக் பாண்டியா மட்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஒரு வீரரையும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கொடுக்கவில்லை.
மேலும் இரண்டு ஆண்டுகளில் முதல் ஆண்டு சாம்பியன், இரண்டாம் ஆண்டு ரன்னர் என மிகவும் வெற்றிகரமாக இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா எப்படி இதற்கு சம்மதித்தார் என்பது பெரிய கேள்வியாக இருந்தது.
மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், தரமான வேகப்பந்துவீச்சாளர், முக்கியமாக கேப்டன் போன்று மூன்று பொறுப்புகளை கவனித்துக் கொண்ட ஒரு வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி எப்படி வெளியே விட சம்மதித்தது, அதுவும் இன்னொரு அணி வலிமையாக அதற்கு டிரேடிங் செய்ய எப்படி சமாதித்தது என்று பெரிய குழப்பமாக இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா கழட்டி விடப்பட்ட பொழுது, அவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக அழைத்து வந்தவர், அந்த அணியின் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ராதான். மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் வெற்றியில் அவருக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை வெளியே விட எப்படி முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து அவர் தற்போது பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஹர்திக் பாண்டியா சென்ற அணி பெரிய ஆச்சரியத்தை தரக்கூடிய அணி கிடையாது. அவர் பல வருடங்கள் அந்த அணிக்காக விளையாடியவர். மேலும் அதே அணிக்கு திரும்பிச் செல்ல அவர் விருப்பம் காட்டினார்.
எங்கள் நிர்வாகத்தின் இயல்பு எப்படியானது என்றால், ஒரு வீரர் போக விரும்புகிறார் என்றால், சரி போங்கள், போய் மகிழ்ச்சியாக இருங்கள் என்பதுதான். எனவே இதனால்தான் நாங்கள் அவர் கேட்டுக் கொண்டதும் அனுப்பி வைத்தோம். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஒரு வீரரை கொண்டு வருவது கடினம். நாங்கள் ஏலத்தில் அதற்கு எங்களால் முடிந்த முயற்சியை செய்தோம்.
நாங்கள் தற்பொழுது 25 வீரர்களைக் கொண்டிருப்பது மிகப்பெரிய வசதி. எங்களுக்கு ஆப்கானிஸ்தானின் ஓமர்சாய் போன்ற நல்ல ஆல் ரவுண்டர் கிடைத்திருக்கிறார். ஆனால் நிறைய அனுபவமும் திறமையும் கொண்ட ஹர்திக் பாண்டியாவை ஈடுசெய்வது கடினம். எங்களிடம் உள்ள திறமைகளைக் கொண்டு, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்வோம்!” என்று கூறி இருக்கிறார்!