“இதுவல்லவோ நாட்டுப்பற்று!” – நடக்கவே முடியாத நாதன் லயன் ஆஸ்திரேலியா அணிக்காக செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

0
613
Lyon

உலகப் புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆசஸ் தற்பொழுது இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் பரபரப்பான கட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பொறுப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டாவது போட்டி, உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து மேகமூட்டமான சூழல் நிலவியதால் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவினாலும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் அபாரமாக விளையாடி தனது 32 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து மிகச் சிறப்பாக ஆரம்பித்தாலும், அதைத் தொடர முடியாமல் 325 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் பென் டக்கெட் 98 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது துவக்க ஆட்டக்காரர் கிரவுலி விக்கெட்டை நாதன் லயன் கைப்பற்றினார். இது அவர் தொடர்ச்சியாக காயம் இல்லாமல் பங்குபெறும் நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்ற சில வீரர்களில் இவரும் ஒருவரானர்.

ஆனால் இதே சிறப்பு வாய்ந்த போட்டியில் அவர் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட காரணத்தினால் நேற்று மைதானத்தில் இருந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இன்று நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் மைதானத்திற்கு அணியினருடன் வந்தார்.

ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்கட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தபோது, அணியின் தேவைக்காக தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் நாதன் லயன் பேட்டிங் செய்ய திரும்ப வந்தார்.

அவர் 13 பந்துகள் பேட்டிங் செய்து ஒரு பவுண்டரி உடன் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் களத்திற்கு வந்த பிறகு ஆஸ்திரேலியா அணி மொத்தமாக 15 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த செயலை ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வரை பாராட்டி இருக்கிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது.