“தோனி கோலியை விட ரோகித்துக்குதான் இது அதிகம்.. அவரே டி20ல சிறந்த கேப்டன்” – கவாஸ்கர் பேட்டி

0
140
Rohit

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோதிய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோகித் சர்மா ரன்கள் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்து இருந்தார்.

14 மாதங்கள் கழித்து இந்திய டி20 அணிக்கு திரும்பியதோடு கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு இது மிகப்பெரிய நெருக்கடியாக மாறியது. உடனடியாக ரசிகர்களிடமிருந்து ரோஹித் சர்மா டி20 பேட்டிங் குறித்து அதிருப்திகள் வெளிப்பட்டன.

- Advertisement -

இந்த நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ரன்கள் 4 விக்கெட்டுகள் என சரிந்தது.

இப்படியான நேரத்தில் அணியை மீட்டதொடு மட்டுமல்லாமல் ரிங்கு சிங்கை வைத்துக்கொண்டு யாரும் எதிர்பார்க்காத டோட்டலை ரோகித் சர்மா கொண்டு வந்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை அடித்து, இந்த வடிவத்தில் அதிக சதம் அடித்தவர் என்றும் மாறினார். மேலும் இந்த போட்டியின் வெற்றி மூலம் குறைந்த போட்டிகளில் அதிக டி20 வெற்றிகளை பெற்ற கேப்டன் என்கின்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

ரோகித் சர்மா அணுகுமுறை குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “உங்களின் கேப்டன்சி திறமை உண்மையில் சோதிக்கப்படும் ஒரு கிரிக்கெட் வடிவம்தான் டி20 கிரிக்கெட். தோனி மற்றும் விராட் கோலி இருவரையும் விட இந்த வடிவத்தில் வெற்றி சதவீதம் ரோகித் சர்மாவுக்கு மிக அதிகமாக இருப்பதால், அவர் எவ்வளவு சிறந்த கேப்டன் என்பதை அது உங்களுக்கு சொல்கிறது.

- Advertisement -

இந்த இன்னிங்ஸில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், பொதுவாக எடுத்ததும் அதிரடியாக விளையாட ஆரம்பித்து, அதற்கடுத்து இன்னும் அதிரடியாக விளையாடக்கூடிய வடிவமாக டி20 கிரிக்கெட் வடிவம் இருக்கிறது.

இந்த நிலையில் 22 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்று இந்திய அணி நெருக்கடியில் இருந்த பொழுது, இந்த இடத்தில் அதிரடி வேண்டாம் என கொஞ்ச நேரம் பொறுமை காட்டி அதற்குப் பிறகு கடைசி ஐந்து ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தார்கள். தங்களுடைய கிரிக்கெட் நுண்ணறிவு மூலமாக இதை செய்தார்கள்.

இங்கு ஆரம்பத்தில் கொஞ்சம் விக்கெட்டுகள் விழுந்து விட்டால் 70 இல்லை 90 ரன்களில் ஆல் அவுட் ஆவோம். ஆனால் இவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்து பிறகு தங்களால் அடிக்க முடியும் என்பதை உணர்ந்து, அதை தங்களுடைய கிரிக்கெட் அறிவால் செய்து காட்டினார்கள்.

பொதுவாக டி20 கிரிக்கெட்டை வேறு விதமான டெம்ப்ளேட்டில் விளையாடுவதையே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் அப்படியில்லாமல் தங்கள் கிரிக்கெட் நுண்ணறிவால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து விளையாடி வெற்றி பெற்றார்கள். டி20 கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் இது மிக முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.