“இப்பவும் விளையாடற இந்த இந்திய வீரர்தான்.. என்னோட பெரிய பயிற்சியாளர்!” – நாதன் லயன் பரபரப்பு பேச்சு!

0
368
Lyon

நவீன கிரிக்கெட் காலத்தில் ஆப்-ஸ்பின் என்பது அழிந்து வரும் பந்துவீச்சு கலையாக மாறி வருகிறது. இந்தக் கட்டத்திலும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இருவர் மட்டுமே ஆப்-ஸ்பின் கலையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் மட்டும் என்று இல்லாமல் இந்தக் காலகட்டத்தில் மிக வேகமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் ஆப்-ஸ்பின் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணம், டி20 கிரிக்கெட்டின் வருகையின் காரணமாக, ஆப்-ஸ்பின் என்பது பகுதி நேர பந்துவீச்சாளர்கள் வீசுவது என்பதாக மாறிவிட்டது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வளரும் வீரர்கள் இந்த வகை பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது கிடையாது.

பேட்டிங் வரிசையில் இருக்கக்கூடியவர்களே தற்பொழுது பகுதி நேரமாக ஆப்-ஸ்பின் வீசுகிறார்கள். ஆனால் இவர்கள் இந்த வகை பந்துவீச்சு கலையில் சிறந்தவர்கள் கிடையாது. சாதாரணமாக வீசக்கூடியவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.

ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லயன் இருவருமே 2011 ஆம் ஆண்டு ஒன்றாக அறிமுகமானார்கள். நாதன் லயன் தற்பொழுது 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 94 டெஸ்டில் விளையாடி 489 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார்கள். இந்த வகையில் லெஜன்ட் ஆப்-ஸ்பின்னர் முரளிதரன் 87 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முன்பாக நாதன் லயன் 500 விக்கெட்டுகள் கைப்பற்ற கூடியவராக மாறுவார்.

இவர் இதை முன்னிட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து பேசும்பொழுது “நீங்கள் அஸ்வினை பாருங்கள். அவர் மிகவும் உலகத்தரமான பந்துவீச்சாளர். மேலும் அவரை நான் ஆரம்ப கட்டத்தில் இருந்து பார்த்து வருகிறேன். பல சூழ்நிலைகளில் நாங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறோம். அவருடைய திறமைக்காகவும் அவர் செய்த விதத்திற்காகவும் அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு.

நான் நிச்சயமாக அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நீங்கள் எதிர்த்து விளையாடும் நபர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள எப்பொழுதும் விஷயங்கள் உண்டு. அவருக்கே தெரியாமல் அவர் எனக்கு ஒரு பெரிய பயிற்சியாளராக இருக்கலாம். தங்கள் இருவரும் செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் எங்கு முடிக்கிறோம் என்று பார்க்க வேண்டும்.

எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் ஒரு முறை ஒன்றாக அமர்ந்து, ஒரு நல்ல உணவு மற்றும் ஒரு பீர் உடன் இதைப் பற்றி எல்லாம் சில விஷயங்கள் பேச வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!