“இந்த இந்திய பவுலர் சரிப்பட்டு வரமாட்டார்.. எங்க ஆளுங்க மாதிரியே இருக்காரு!” – பாகிஸ்தான் பவுலர் சல்மான் பட் பரபரப்பு பேச்சு!

0
1400
Butt

நேற்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு அந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை.

மிகக் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக அந்த ஆடுகளத்தில் விளையாடிய இலங்கை அணியின் கேப்டனே நினைக்கவில்லை. அந்த அளவுக்கு பந்து நன்றாக திரும்பியது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடுகளங்கள் போல இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியினர் மொத்த பத்து விக்கெட்களையும் தமது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் கொடுத்து 213 ரன்களுக்கு மடங்கினார்கள்.

இந்த நிலையில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணியின் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்று இருந்த அக்சர் படேல் ஐந்து ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் கைப்பற்றாமல் 29 ரன்கள் கொடுத்திருந்தார். மேலும் அந்த ஆடுகளத்தில் கூட அவரது பந்து திரும்பவே இல்லை.

- Advertisement -

இது இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இலங்கை அணியின் பகுதிநேர பந்துவீச்சாளர் அசலங்கா நான்கு விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறுகையில் ” அக்சர் படேல் பந்துவீச்சை பார்க்கும் பொழுது அவர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சுக்கு இணையாக கிடையாது. அவரது பேட்டிங் நன்றாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த விக்கெட்டில் பந்தில் எந்த திருப்பத்தையும் பெறவில்லை என்றால், அவரால் வேறு எங்கே பந்தை திருப்ப முடியும்? இலங்கை அணியின் அசலங்கா நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஆனால் அக்சர் படேல் பந்தில் திருப்பத்தையே பெறவில்லை. இது கவலைக்குரிய விஷயமாகும்.

குல்தீப் யாதவ் நல்ல பந்துவீச்சை கொண்டுள்ளார். குல்தீப் மற்றும் ஜடேஜா இருவரும் நல்ல ரிலீஸ் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பந்து வீச்சில் நல்ல ரிப் இருக்கிறது. எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்தை காற்றில் வைப்பது மற்றும் ரெவ்ஸ் கொடுப்பதற்கு பதிலாக, பேட்டர்களை நோக்கி பந்தை உள்ளே தள்ளுகிறார்கள். அவர்கள் தட்டையாக வீசுகிறார்கள். இதைத்தான் அக்சரும் செய்கிறார். ஆனால் இதையே ஜடேஜா செய்தால் கூட அவரால் பந்தில் ரிப் கொடுக்க முடிகிறது!” என்று கூறி இருக்கிறார்!