பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் ரிவ்யூ கேட்ட பந்துக்கு பதிலாக வேறு பந்தை சரி பார்த்த 3வது நடுவர் – வீடியோ இணைப்பு

0
230
Kyle Mayers

வெஸ்ட் இன்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி தொடரை நெதர்லாந்தில் முடித்துவிட்டு, தற்போது பாகிஸ்தானிற்கு மூன்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டில் கோவிட் தொற்றால் இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்ய ஷாய் கோப், கைய்ல் மேயர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினார்கள்.

- Advertisement -

இதில் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை ஷாகின் ஷா அப்ரிடி வீசினார். இந்த ஓவரில் ஒரு புல் நேராக பவுலர் ஷாகின் ஷா அப்ரிடியின் கைகளுக்கு அடித்தார் கைய்ல் மேயர்ஸ். இந்தப் பந்தை பிடித்த அவர் அவுட் முறையீடு செய்ய, முடிவு மூன்றாவது நடுவரிடம் சென்றது.

மூன்றாவது நடுவர் பந்து தரையில் பட்டதா என்று பலவிதமாகப் பார்த்து, இறுதியில் அவுட் என்று தீர்ப்பளிக்க, கைய்ல் மேயர்ஸ் வெளியேறினார். இதுவரை இந்த விசயத்தில் நடந்தது எல்லாமே சரிதான். ஆனால் இதற்குப் பிறகு நடந்த விசயம்தான் அதிர்ச்சியோடு ஆச்சரியமாகவும் அமைந்தது.

அதாவது பந்துவீச்சாளரின் கால் எங்கிருந்தது என்று பார்க்க காட்டப்பட்ட காட்சியில், ஷாகின் ஷா அப்ரிடி ரவுண்ட் த ஸ்டம்பில் இருந்து வீசுவதாக இருந்தது. ஆனால் அவர் கைய்ல் மேயர்ஸ்க்கு ஷாகின் ஷா அப்ரிடி வீசியது ஓவர் த ஸ்டம்ப்பில் இருந்துதான். மேலும் கைய்ல் மேயர்ஸின் விக்கெட்டுக்கு பார்க்கப்பட்ட ரீ-ப்ளேவில், பந்துவீச்சாளரின் முனையில் கைய்ல் மேயர்சும் இருந்தது நகைச்சுவையாக அமைந்தது.

- Advertisement -

இதை எந்த வர்ணனையாளர்களும் கண்டுபிடிக்கவில்லை. தீர்ப்பிற்குப் பிறகு இரசிகர்கள் சிலர்தான் இந்தத் தவறைச் இணையத்தில் சுட்டிக்காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இன்டீஸ் 305 ரன் குவிக்க, அதை 49.4 ஓவரில் எட்டி பாகிஸ்தான் வெற்றி பெற்றது!