திக் திக் போட்டி.. 1 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தானை வீழ்த்தியது.. அரையிறுதி வாய்ப்பு முடிந்ததா?

0
1288
Pakistan

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிக முக்கியமான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டியில் வென்றால் அரை இறுதி மிக நெருக்கமாக உறுதி செய்யலாம், பாகிஸ்தான் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் இருக்க முடியும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை உசாமா மிர் நீக்கப்பட்டு முகமது நவாஸ் கொண்டுவரப்பட்டார். ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் சதாப்,கானுக்கு தலையில் காயம் பட, அதன் காரணமாக உசாமா மிர் பந்துவீச்சுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் 9, மற்றும் இமாம் 12 ரன்கள் என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து 48 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். முகமது ரிஸ்வான் 31 ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து இப்திகார் அகமது 21, கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற நெருக்கடி உருவானது. இந்த நிலையில் சவுத் ஷகில் மற்றும் சதாப் கான் இருவரும் சேர்ந்து அணியை மீட்டார்கள். இந்த ஜோடி 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

சதாப் கான் 43, சவுத் ஷகில் 52, முகமது நவாஸ் 24, ஷாகின் அப்ரிடி 2, முகமது வாசிம் 7, ஹாரிஸ் ரவுப் 0* என ரன்கள் எடுக்க 46.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஷாம்சி 4, மார்க்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து தென்னாபிரிக்க அணிக்கு துவக்க வீரர்களாக வந்த குயிண்டன் டி காக் 24, டெம்பா பவுமா 28, வான்டர் டேசன் 21, ஹென்றி கிளாசன் 12, டேவிட் மில்லர் 29, மார்கோ யான்சன் 20, ஜெரால்ட் கோட்சி 10 ரன்கள் என வெளியேறினார்கள்.

இந்த நிலையில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த பொழுது, களத்தில் நின்று மிகச் சிறப்பாக விளையாடி வந்த எய்டன் மார்க்ரம் தேவையில்லாத ஒரு ஷாட் விளையாட போய் 91 ரன்கள் ஆட்டம் இழந்தார். இந்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா எட்டு விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கு அடுத்தது கேசவ் மகாராஜ் மற்றும் லுங்கி நிகிடி இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். ஆட்டம் பரபரப்பானது. இந்த ஜோடி மேற்கொண்டு 11 ரன்கள் எடுக்க, வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருக்க, லுங்கி நெகிடியை அபாரமான பந்துவீச்சு மற்றும் கேட்ச் மூலமாக ஹாரிஸ் ரவுஃப் வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் இழந்து இருக்க, 10 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 11ஆவது பேட்ஸ்மேனாக ஷாம்சி களத்திற்கு வந்தார். ஒருவழியாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் முடிவுக்கு வந்தன.

இதற்கு அடுத்து 48வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் வீச வந்தார். இந்த நேரத்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஷாம்சி ஒரு ரன் எடுக்க, லெக் சைட் வீசப்பட்ட பந்தை கேசவ் மகாராஜ் அபாரமாக பவுண்டரிக்கு தட்டி, பரபரப்பான ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெல்ல வைத்தார்.

தற்போது தென் ஆப்பிரிக்க அணி ஆறு போட்டிகளில் 5 வென்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி 5 போட்டிகளில் ஐந்தையும் வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி ஆறு போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டும் வென்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் அணி 99 சதவீதம் அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்று சொல்லலாம்!