“மினி ஏலத்துக்கு மட்டும் வந்து ஏமாத்தி சம்பாதிக்கிறாங்க.. தடுக்க 2ஐடியா தரேன்!” – தினேஷ் கார்த்திக் செம யோசனை!

0
4934
DK

ஐபிஎல் தொடரில் சில வாரங்களுக்கு முன்பாக வீரர்களை டிரேடிங் செய்யும் முறை, ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் செய்த விதத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த டிரேடிங் முறையை நீக்க வேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் 24.75 கோடி மற்றும் பேட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு விலை போனார்கள். ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு ஏல விற்பனையுமே, முதல் இரண்டு இடங்களில் பதிவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது மினி ஏலத்தில் மட்டுமே வந்து வீரர்கள் பங்கு பெறுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுவாக இருந்திருக்கிறது. காரணம் சில வீரர்கள் ஒரு ஆண்டு விளையாடுவதை தவிர்த்து, மினி ஏலத்தில் வந்து அதிக தொகையை பெறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

மினி ஏலத்தை பொறுத்தவரை ஒரு அணியின் தேவைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். வீரரின் திறமைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாது. சில நேரங்களில் சில வீரர்கள் மெகா இடத்தில் வாங்குவதை விட மூன்று மடங்கு விலையை மினி ஏலத்தில் பெறுவார்கள்.

தற்பொழுது இதற்கு என்ன தீர்வு என்று பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “வீரர்களும் அவர்களுக்கான ஏஜென்ட்களும் அதிக பணம் சம்பாதிப்பதற்கு மினி ஏலத்தை ஒரு குறுக்கு வழியாக பயன்படுத்துகிறார்கள். மெகா ஏலத்தில் குறைந்த பணம் கிடைக்கும் நிலையில், மினி ஏலத்தில் நம்ப முடியாத விலைக்குப் போகிறார்கள். இந்த ஆரோக்கியமற்ற போக்கு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

- Advertisement -

இதை தடுக்க என்னிடம் இரண்டு தீர்வுகள் இருக்கிறது. ஒன்று, அணிகளால் கழட்டி விடப்பட்டு மினி ஏலத்துக்கு வரும் வீரர்கள் மற்றும் புதிதாக வரக்கூடியவர்களுக்கு, நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு எந்த வீரர் போயிருந்தாரோ, அந்த விலையைத் தாண்டி தொகை ஏலத்தை அனுமதிக்க கூடாது.

இரண்டு, ஒரு அணி குறிப்பிட்ட வீரரை எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளட்டும். ஆனால் அதே அணியில் அதிக சம்பளமாக ஒரு வீரருக்கு எவ்வளவு கொடுக்கப்படுகிறது, அதே சம்பளத்தைதான் மினி ஏலத்தில் வாங்கிய வீரருக்கும் கொடுக்க வேண்டும். அதில் மீதம் வரும் தொகையை பிசிசிஐ இடம் கொடுத்து விட வேண்டும். இது சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நிறைய வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் இந்த ஓட்டையை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!