இந்திய அணி தற்போது நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இழந்தது மிகப்பெரிய சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறது!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் இந்திய அணியின் இந்த தோல்வியை ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைகளிலும் எதிரொலிக்கலாம், என்ன செய்திருந்தாலும் எதிரில் இருக்கும் அணி யாராக இருந்தாலும் தோல்வி என்பது மன ரீதியாக பாதிக்கும் என்கின்ற அளவில் பேசியிருக்கிறார்.
மேலும் மிக முக்கியமாக இந்த தொடரில் இந்திய அணியின் திட்டங்கள் எவ்வாறு இருந்தது? கேப்டன் பொதுவான திட்டங்களை எப்படி களத்தில் செயல்படுத்தினார்? மேலும் முக்கிய முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் களத்தில் தன்னுடைய தனிப்பட்ட முடிவுகளை எப்படி எடுத்தார்? இன்று பார்க்கும் பொழுது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கிரிக்கெட் உலகில் இந்திய அணிக்கு இருக்கும் மதிப்பிற்கு தகுந்தவாறு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படவில்லை என்பதாகத்தான் தெரிய வருகிறது. தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அடிப்படை திட்டங்களில் தடுமாறி வருவதும், கேப்டன்கள் யாராக இருந்தாலும் களத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது தவறாக அது அமைவதும், தொடர்கதையாகி வருகிறது.
தற்பொழுது நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை பற்றி குறிப்பிட்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் இதுகுறித்து கூறுகையில் ” முகேஷ் குமாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகமும் கேப்டனும் யோசிக்க வேண்டும். தற்போதைய திட்டத்தில் முகேஷ் குமாரின் பங்கு என்னவென்று தெளிவாக கூறப்படவில்லை. ஒரு பந்துவீச்சாளராக அவர் அணிக்கு என்ன கொண்டு வருகிறார் என்பது குறித்தும் தெளிவான வரையறை இல்லை.
என்னுடைய கருத்துப்படி நீங்கள் வேகப்பந்துவீச்சாளருக்கு புதிய பந்தில் ஒரு ஓவராவது கொடுக்க வேண்டும். பின்னர் கடைசி கட்டத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் இந்திய அணி நிர்வாகம் ஒரு கட்டத்தில் அவர் இறுதி நேரத்தில் மட்டுமே பந்து வீசக்கூடியவர் என்பதாகவே பார்த்தது.
களத்தில் அவருக்கு இந்திய அணி நிர்வாகம் அவருக்கான முழுமையான ஓவர்களை கூட கொடுக்கவில்லை. இதுவும் கவலைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. முகேஷ் குமார் தன்னுடைய எந்த திறமையையும் காட்டவில்லை. ஏனென்றால் அதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இவர்கள் அவருக்கு தரவில்லை. தற்போதைய அளவில் அவர் சிறந்த யார்க்கரை இறுதி கட்டத்தில் வீசுகிறார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட எல்லா பணிகளிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். அவருக்கு எந்த வேலை கொடுக்கப்பட்டாலும் அதை சிறப்பாக செய்ய அவர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார். கேப்டனும் அவருக்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் வாய்ப்பு தரப்படும் என்று கூறினார். ஆனால் கடந்த டி20 போட்டியில் அவர் ஒரே ஒரு பந்து மட்டுமே வீசினார். இதற்கு முன்பே இது குறித்து ஒரு தெளிவு இருந்திருக்கும் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!