“இந்தியாவுடன் எடுத்த இவரோட விக்கெட்தான் என் கனவு விக்கெட்” – ஆட்டநாயகன் வெல்லாலகே அசத்தல் பேட்டி!

0
2981
Vellalage

நேற்று இந்திய அணி ஆசியக்கோப்பை இரண்டாவது சுற்றில் இலங்கை அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியை வென்றதன் மூலம், அந்த அணி தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் பெற்று வந்த வெற்றிக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் நாளை இலங்கை பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியில் யார்? வெல்கிறார்களோ அவர்களே இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இந்திய அணி இலங்கையை வென்ற போதிலும் அந்த அணியில் 20 வயதான இளம் இடதுகை சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் துனித் வெல்லாலகே பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

முதலில் பந்துவீச்சில் ஒன்பது ஓவர்கள் பந்து வீசி, ஒரு மைடன் செய்து, 40 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்.ராகுல், ஹர்திக் பாண்டியா என முக்கிய வீரர்கள் அடக்கம்.

- Advertisement -

இதற்குப் பிறகு நெருக்கடியான நேரத்தில் எட்டாவது விக்கெட்டுக்கு பேட்டிங் செய்ய வந்து, ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் உடன் 46 பந்தில் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். நேற்று அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்படடார்.

பந்துவீச்சு முடித்து அவர் பேட்டி கொடுத்த பொழுது ” எனது பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு குறிப்பாக என்னுடைய சுழற் பந்துவீச்சு பயிற்சியாளருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் எனது இயல்பான வேரியேஷன்களை வீச முடிவு செய்தேன். ரன்கள் கொடுக்கவில்லை. எனது கனவு விக்கெட் விராட் கோலியின் விக்கெட். விக்கெட்டில் சீரற்ற பவுன்ஸ் இருந்தது. விளையாடுவது எளிதானது அல்ல. எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை இருக்கிறது. நாங்கள் சிறந்த முறையில் ஃபைட் செய்வோம்!” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பிறகு ஆட்டநாயகன் விருது பெற்று பேசிய அவர் “முதலில் இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களிடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் துரதிஷ்டவசமாக தோற்றோம். ஆனால் எங்களிடம் இன்னும் ஒரு ஆட்டம் இருக்கிறது. நாங்கள் நல்ல போட்டியை கொடுக்க விரும்புகிறோம். குல்தீப் சிறந்த பந்துவீச்சாளர். எனது இயல்பான ஆட்டத்தை நேர்மறையான எண்ணத்துடன் விளையாட முயற்சி செய்தேன். எனது அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு பெரும் ஆதரவை வழங்கினார்கள்!” என்று கூறி இருக்கிறார்!