நியூசிலாந்து அணியிடம் ஒயிட் வாஸ் ஆகி உலகக் கோப்பை தகுதியை இழந்த இலங்கை அணி!

0
287

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வந்தது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டித் தொடர் நடைபெற்று வந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடைபெற்றது .

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு இந்த போட்டியிலும் சிறப்பாக இருந்தது. அந்த அணியின் ஹென்றி சிப்பிலி சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஆல்ரவுண்டர் டேரில் மிச்செல் மற்றும் மேட் ஹென்றி ஆகியோரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை அணியின் தரப்பில் பத்தும் நிசாங்கா அபாரமாக ஆடி அரை சதம் எடுத்தார். இவர் 54 பந்துகளில் 57 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார் இதில் எட்டு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். கேப்டன் தஷன் சனக்கா 36 பந்துகளில் 31 ரன்களெடுத்து ஆட்டம் இழந்தார் இதில் மூன்று பௌண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தது . இதனால் அந்த அணி 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளுடன் தடுமாறியது. அதன் பிறகு 51 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த வில் எங் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஜோடி சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பாக நூறு ரன்கள் சேர்த்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த வில் யங் 86 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். ஹென்றி நிக்கோலஸ் 44 ரன்களுடன் களத்திலிருந்தார் இதில் 5 போன்ற அடிகள் அடக்கம். இதன் மூலம் நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வில் யங் ஆட்டநாயகனாகவும் சிப்பிலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்த ஒரு நாள் போட்டி தொடரின் இரண்டு போட்டிகளையும் தோற்றதன் மூலம் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருக்கிறது இலங்கை அணி. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆடித்தான் உலகக் கோப்பைக்கு தகுதி பெறமுடியும். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த அணி நெதர்லாந்து அணியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்று வீழ்த்தும் பட்சத்தில் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்று விடும்.