மகேந்திர சிங் தோனியின் காலத்தில் இருந்து விராட் கோலி கேப்டன் ஆக இருந்த காலம் வரை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்!
தற்போது இவர் அந்தப் பணியில் இருந்து விலகி கிரிக்கெட் வர்ணனையாளராக தொலைக்காட்சியில் செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் வர்ணனையில் இந்திய அணிக்குள் நடந்த பல முக்கியமான விஷயங்களையும் வீரர்களை பற்றியும் இவர் ஆச்சரியமான தகவல்களை அடிக்கடி கூறி வருவார்!
மேலும் இவர் தான் இந்திய அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் நடந்த விஷயங்களைக் கொண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல முக்கியமான விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
அதில் ஒரு விஷயமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியவுக்கு சுற்றுப்பயணம் செய்து அதில் ஒரு நாள் தொடரை இழந்து டி20 தொடரை கைப்பற்றியது.
இந்த டி20 தொடரில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்யும்பொழுது பந்து ஹெல்மெட்டில் பட்டு மூளை அதிர்ச்சிக்கு உள்ளானார். இப்படி தலையில் அடிபடும் வீரருக்கு மாற்றாக அவருடைய பணியை செய்யக்கூடிய வகையில் மாற்று வீரரை விளையாட வைக்கும் விதி அப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட இருந்தது. இந்த விதியை பயன்படுத்தி ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் சாகல் வந்து ஆஸ்திரேலியாவின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அப்பொழுது இந்தியா இந்த விதியை தவறாக பயன்படுத்தி சாகலை கொண்டு வந்து தொடரை வென்றதாக விமர்சனங்கள் எழுந்திருந்தது. தற்பொழுது இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்து பார்த்த ஸ்ரீதர் ஆச்சரியமான ஒரு புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது
” நான் அப்பொழுது டக் அவுட்டில் இருந்தேன். ஆட்டத்தின் இரண்டாவது பகுதிக்கு முன் இந்திய அணிக்கு ஃபீல்டிங் ஸ்டேஷன்களை அமைக்க மும்முரத்தில் இருந்தேன். என் பக்கத்தில் மயங்க் அகர்வால் மற்றும் சஞ்சு சாம்சன் அமர்ந்திருந்தார்கள் . அப்பொழுது சஞ்சு திடீரென்று ” சார் இப்பொழுது ஜடேஜாவுக்கு பந்து பட்டது ஹெல்மெட்டில்தானே? மூளை அதிர்ச்சியை காரணம் காட்டி நாம் ஏன் அவருக்கு பதிலாக சாகலை பயன்படுத்தக் கூடாது? என்று கூறினார்” என்று தெரிவித்திருக்கிறார்!
மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சஞ்சுவின் அந்த விரைவான சிந்தனை தான் சாகலை உள்ளே கொண்டு வர வழி வகுத்தது. அங்கு தான் அவரிடம் இருந்த ஒரு கேப்டனை நான் பார்த்தேன். விளையாட்டைப் பற்றி சிந்திக்கும் ஒரு தலைவரை பார்த்தேன். இதெல்லாம் ஒருவரின் கேரக்டர் எப்படியானது என்பதை காட்டும் தருணங்கள் ஆகும்” என்று கூறி இருக்கிறார்!