டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த 5 வீரர்கள்

0
3262
Zaheer Khan and Ashton Agar

டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. அதிசயங்களும் சுவாரஸயங்களும் நிறைந்த பார்மட் தான் டெஸ்ட் கிரிக்கெட். முன்னெல்லாம், நம்பர் 9,10,11 பேட்ஸ்மேன்கள் களமிறங்கினால், எதிரணியின் தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகிவிடுவார்கள். ஏனென்றால், 10 அல்லது 15 பந்தில் அவர்களது விக்கெட்டை எளிதில் வீழ்த்தி விடுவார்கள். ஆனால், தற்போது எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது.

ஆல்ரவுண்டர்களுக்கு நிகராக பவுலர்களும் சிறப்பாக ஆடி அணிக்கு ரன் சேர்க்கின்றனர். 9/10வது இடத்தில் களமிறங்கி ஒரு சில வீரர்கள் சதம் அடித்துள்ளனர். அணியின் நட்சத்திர வீரரும் 11வது வீரரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கை பல முறை மாற்றி உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த 5 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. பாகிஸ்தானுக்கு எதிராக ரிச்சர்ட் காலிங் 68*

நியூசிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் காலிங் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் சேர்த்து அணிக்கு மிக முக்கியமான பங்களிப்பை கொடுத்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 402 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 251 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

ஆல் அவுட் ஆகும்போது 100+ ரன்கள் பின்தங்கிய நிலை ஏற்ப்படுமோ என்று நியூசிலாந்து அணி அச்சம் கொண்டது. ஆனால், ப்ரியன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் ரிச்சர்ட் காலிங் இருவரும் ஜோடி சேர்ந்து அந்த அச்சத்தை போக்கினார். ப்ரியன் ஹேஸ்டிங்ஸ் 110 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ரிச்சர்ட் காலிங் 68 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணியும் 402 ரன்களை எட்டியது.

4. பங்களாதேஷ்க்கு எதிராக ஜாகீர் கான் 75

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 2004ல் நடந்த டெஸ்ட் போட்டியில், ஜாகீர் கான் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார். முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 393/9 என்ற வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

கடைசி நபரான ஜாகீர் கான், லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கூடுதல் பலம் சேர்த்தார். ஜாகீர் 115 பந்துகளில் 75 ரன்கள் அடித்த பின்னர் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் எடுத்திருந்தார். பங்களாதேஷ்க்கு எதிரான இந்த அரை சதம் தான் ஜாகீர் கானின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்.

3. இந்தியாவுக்கு எதிராக ஜேம்ஸ் ஆண்டர்சன் 81

பவுலிங்கில் 30 முறை பந்தை உயர்த்திய ஆண்டர்சன், பேட்டிங்கில் இதுவரை ஒரே ஒரு முறை தான் பேட்டை உயர்தி உள்ளார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 457 ரன்கள் அடித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 298 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் பறி கொடுத்தது. ஜோ ரூட் மட்டும் ஒரு முனையில் போராடிக் கொண்டிருந்தார்.

ஜோ ரூட்டுடன் கடைசி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்திய பவுலர்களை இருவரும் பதம் பார்த்தனர். இருவரும் 10வது விக்கட்டுக்கு 198 ரன்கள் சேர்த்தனர். ஜோ ரூட் சதம் அடிக்க, ஆண்டர்சன் 130 பந்துகளில் 81 ரன்கள் விளாசி தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து அணி தரப்பில் ரூட் மற்றும் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பாக விளையாடினர்.

2. இங்கிலாந்துக்கு எதிராக டினோ பெஸ்ட் 95

2012ல் நடந்த இங்கிலாந்து – மேற்கிந்திய போட்டியில் டினோ பெஸ்ட் 95 ரன்கள் விளாசினார். முதலில் ஆடிய மேற்கிந்திய அணி 283 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இரதந்திருந்தது. 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிவிடும் என்று நினைத்த போது, தினேஷ் ராம்தினும் டினோ பெஸ்ட்டும் ஜோடி சேர்ந்து மேற்கிந்திய அணியை 426 ரன்கள் வரை அழைத்துச் சென்றனர்.

தினேஷ் ராம்தின் சதம் விளாசினார். ஆனால் டினோ பெஸ்ட் 5 ரன்களில் தனது சதத்தை நழுவினார். அவர் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ்ர் உட்பட மொத்தம் 95 ரன்கள் அடித்தார்.

1. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷ்டன் அகர் 98

2013 ஆஷஸ் தொடரில் அறிமுகமானார் ஆஷ்டன் அகர். தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆஸ்திரேலிய அணி 117/9 என தத்தளித்த போது, கடைசி விக்கெட்டுக்கு பிலிப் ஹியூக்ஸுடன் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை அலைய வைத்தனர்.

ஆஷ்டன் அகர் 101 பந்துகளில் 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மறு முனையில் பிலிப் ஹியூக்ஸ் 81 ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஷ்டன் அகர் மற்றும் ஹியூக்ஸ் அதிரடியால் ஆஸ்திரேலியா அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது இடத்தில் களமிறங்கிய ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் இதான்.