உங்களின் வீரர்களுக்கு மதிப்பளியுங்கள் – இந்திய அணி வீரருக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தான் வீரரின் குரல்

0
208
Ind vs Pak 2021 T20WC

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணி பாகிஸ்தான் அணியை உலக கோப்பை தொடரில் சந்தித்தது. அதுவரை உலக கோப்பை ஆட்டங்களில் ஒருமுறைகூட பாகிஸ்தான் அணியிடம் தோல்வி பெறாமல் இந்திய அணி ஆட வந்தது. அதே நேரத்தில் இந்த முறையாவது இந்திய அணியை வீழ்த்தி சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் அணி வந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சகீன் அஃப்ரிடி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். ரோகித் மற்றும் ராகுல் என இரண்டு துவக்க வீரர்களையும் விரைவாக வெளியேற்றி இந்திய அணியின் டாப் ஆர்டரை தகர்த்தார்.

கேப்டன் விராட் கோலி அரை சதம் அடித்தாலும் இந்திய அணியால் 151 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இரண்டு வீரர்களுமே அரைசதம் கடக்க பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் வெற்றி பெற்றது. இதனால் உலக கோப்பைகளில் இந்திய அணியை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி சற்று தடுமாற்றத்துடன் பந்து வீசினார். அவர் வீசிய 3.5 ஓவர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு 43 ரன்கள் கிடைத்தது. இதனால் முகமது ஷமி மிகவும் கேலிக்கு ஆளானார். சொந்த நாட்டு ரசிகர்கள் அவரை மிகவும் தரக்குறைவாக மதரீதியாக விமர்சித்து வந்தனர்.

இதன் பிறகு ஷமிக்கு ஆதரவாக பல இந்திய வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர். இர்பான் பதான் விரேந்தர் சேவாக், சச்சின் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் வெற்றியை பறித்த பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் ஷமிக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் ஒரு வீரர் பல தியாகங்களை செய்து தான் அணிக்கு ஆட வருகிறார் என்றும் முகமது ஷமியும் இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் உங்கள் நாட்டிற்கு ஆடும் வீரர்களுக்கு மதிப்பளியுங்கள் என்றும் விளையாட்டு மக்களை இணைப்பதாக இருக்க வேண்டும் என்றும் பிரிப்பதாக இருக்கக் கூடாது என்றும் கருத்து கூறியுள்ளார்.

- Advertisement -

அடுத்த நியூசிலாந்து அணிக்கு எதிராக முகமது ஷமி எப்படி செயல்படப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.