இந்தியாவில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான அணி மொத்தம் நான்கு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பு இழந்து வெளியேறியது.
தொடர்ந்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் அரை இறுதி வாய்ப்பை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது, பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது.
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் மாற்றப்பட்டார்கள். கேப்டனாக இருந்த பாபர் அசாம் அழுத்தத்தின் காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிக் கொண்டார்.
மேலும் உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தேர்வுக்குழு தலைவராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ஜாகரா அஷ்ரப் மீது இன்சமாம் உல் ஹக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சில விருப்பத்தகாத பேச்சுகளை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் பேசும் பொழுது ” இந்தியாவில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்பு போன்ற ஒரு முக்கியமான தொடரின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இந்த அணியை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், தேர்வு குழு மற்றும் கேப்டன் மட்டுமே இதில் ஈடுபட்டார்கள் என்று சொன்னால் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
இந்த நேரத்தில் தலைமை தேர்வாளரான என் மீது விசாரணை குழு அமைக்கப்பட்டு, நான் பாதியில் ராஜினாமா செய்ததை வீரர்கள் கேள்விப்பட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? இது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு எதிரான விசாரணைக் குழுவின் அறிக்கைக்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் தலைமை தேர்வாளராக இருந்த பொழுது சரியான முறையில் செயல்படவில்லையா? என்பது குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு இது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் அணியின் செயல் திறனை பாதித்தது. பாபர் அசாம் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர் மீது கொடுக்கப்பட்ட அழுத்தத்தை பார்த்த மற்ற வீரர்கள் என்ன நினைத்து இருப்பார்கள்? ஒரு அணி உலகக்கோப்பை தொடரில் போராடிக் கொண்டிருக்கும் பொழுது முழு நம்பிக்கையும் வெளியிலிருந்து நாம் கொடுக்க வேண்டும். அணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, அவர்களுக்கு நம்பிக்கையும் ஆதரவு மட்டுமே தேவை” என்று கூறி இருக்கிறார்.